அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் நாளை காலை நடைபெறுகிறது.
அவைத்தலைவர் மது சூதனன் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழுவில் 300 பேர் பங்கேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
கூட்டத்திற்கு வருகை தரும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள செயற்குழு உறுப்பினர்களும் அங்கேயே பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்களின் பரிசோதனை முடிவுகள் விவரம் தலைமைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலருக்கு ‘பாசிட் டிங்’ என்று முடிவுகள் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
கொரோனா ‘பாசிட்டிங்’ உள்ளவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செயற்குழு உறுப்பினர்களில் எத்தனை பேர் நாளைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்ற விவரம் அறிவிக்கப்படும் போது, கொரோனாவால் எத்தனை பேர் பங்கேற்கவில்லை என்ற விவரமும் தெரிவிக்கப்படும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செயற்குழுவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களை ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி மூலம் முக்கியமானவர்களுடன் பேசுகிறார்.
செயற்குழுவில் என்னென்ன விஷயங்களை பேச வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளை யாரும் பேசினால் அதை எப்படி சமாளிப்பது போன்ற விசயங்கள் குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அவைத்தலைவராக உள்ள மதுசூதனன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பதிலாக பொன்னையனை அவைத்தலைவராக நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால் நாளை நடைபெறும் கூட்டத்தில் மதுசூதனன் பங்கேற்பார் என்றும் இப்போதைக்கு அவைத்தலைவர் மாற்றம் இல்லை என்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.