அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது, “உத்தேச திருத்தத்தினை மேலும் பலர் எதிர்க்கலாம்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து கருத்துக்கள் வெளியாகியுள்ள போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கான உறுதியான கால எல்லையை அல்லது யோசனைகளை முன்வைக்கவில்லை.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை குறைத்து ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு 20வது திருத்தம் முயல்கின்றது.
மேலும், நாட்டுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியம். ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பாதுகாக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.