தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை – அமைச்சர் பாண்டியராஜன்

253 0

தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். அதன்பின், அந்தப் பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் அரசு நிலங்கள் சம்பந்தமான பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பீகார் மாநிலத்தில் எப்போது தேர்தல் நடக்க வேண்டுமோ, அந்த நாளில்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு மே 23-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கும் என நம்புகிறேன்.
நம்மைவிட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலத்தில் தேர்தல் நடத்துகிறார்கள். இன்னும் 8 மாதத்துக்குள் கொரோனா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். பிரதமர் மோடியே, நமது முதலமைச்சரை பாராட்டி உள்ளார்.
தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மே மாதம் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது என்ற செய்தி வரும்.
மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கான பாடலை பலரும் பாடத் தயங்கிய காலத்தில் அவருக்காக பாடியவர். இப்போதும் அ.தி.மு.க.வில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்தப் பாடல் முதலில் ஒலிக்கும். 4 தலைமுறைகளுக்கான பாடல்களை பாடி உள்ளார். அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் விதைக்கப்பட்டு இருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எங்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயமாகக் கருதுகிறோம் என தெரிவித்தார்.