20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் நீதித்துறை, சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் – மனித உரிமை அமைப்புக்கள்

331 0

20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

அதேவேளை நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தைப் பெரிதும் வலுவிழக்கச் செய்யும் என்றும் குறித்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதுமாத்திரமன்றி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய விதமாக அரசாங்கம் செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளன.

ஆகவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 வது கூட்டத்தொடரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளரினால் இலங்கை தொடர்பான விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய அமையம் உள்ளிட்ட 5 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றன.

மேலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தமைக்காக ஐ.நா விசேட அறிக்கையாளருக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் நன்றி தெரிவித்துள்ளன.