தியாகி திலீபனுக்கான நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளுதல்…

318 0
தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி, தன்னை ஆகுதியாக்கிய தற்கொடைப் போராளி அவர்! ஆயுதப் போராட்ட வீரனாக எழுந்து, அஹிம்சை தேசத்துக்கே அஹிம்சை போதித்தவர். 

அவருக்கான நினைவேந்தலை முன்னெடுக்க முடியாதவாறு நீதிமன்றங்களின் ஊடாக, பொலிஸார் தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அம்பாறை மாவட்டம் தவிர்ந்து, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் தடை உத்தரவு இதுவரை பெறப்பட்டிருக்கிறது.

மரணித்தவர்களை நினைவு கூருதலும் அவர்களுக்கான சமயக் கிரியைகளைச் செய்வதும் தனி உரிமை. ஒவ்வோர் இனக் கூட்டத்துக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் உண்டு; அதுபோல, மரணித்தவர்களின் மாண்மைப் பேணும் உரிமையும் உண்டு. அதில் தலையீடுகளைச் செய்யும் உரிமை எந்தவொரு தரப்புக்கும் இல்லை.

ஆனால், போராடி உயிரிழந்தவர்கள் என்பதற்காக, அவர்களை நினைவுகூர முடியாது என்கிற அடிப்படைத் தார்மீகங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரான நிலைப்பாடொன்று, நீண்ட காலமாகவே இலங்கையில் அரச இயந்திரங்களால் பேணப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இது வௌிப்படுத்தப்படுகின்றது.

எல்லாளனை நேரடிச் சண்டையில் வீழ்த்திய துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி எழுப்பி, அவருக்கான அஞ்சலியைச் செலுத்தினான் என்று, தென் இலங்கை தொடர்ச்சியாகத் தன்னுடைய முன்னோர்களின் நற்குணவியல்பு சார்ந்து பெருமை பேசுவதுண்டு.

ஆனால், துட்டகைமுனு வழி வந்தவர்களாகத் தங்களை முன்னிறுத்தும் இன்றைய ஆட்சியாளர்களோ, மரணித்தவர்களை அஞ்சலிப்பதற்கே தடை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அஞ்சலிப்பதற்கானதும் நினைவேந்துவதற்கானதுமான உரிமை என்பது, ஜனநாயக வழிமுறை சார்ந்தது. அதுமட்டுமல்ல, கூட்டுக்காயங்களை ஆற்றுவதற்குமான வழிமுறை ஆகும். அதுதான், நம்பிக்கையான மாற்றங்களைச் சமூகங்களுக்கு இடையில் ஏற்படுத்துவதற்கு உதவும்.

சுதந்திர இலங்கை, இன முரண்பாடுகளுடன்தான் பிறந்தது. அது, இன்னமும் அந்த முரண்பாடுகளை மூர்க்கமாகப் பேணிக் கொண்டிருக்கின்றது. அதன் பேரில், பேரழிவுகளையும் சந்தித்திருக்கின்றது. அப்படியான நிலையில், முரண்பாடுகளைத் தீர்த்து, சமாதானத்தை அடைதல் என்பது, ஒவ்வோர் இனக்குழுமத்தினதும் அடிப்படை உரிமைகளைப் பேணுவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஆனால், தென் இலங்கையோ அதைச் செய்வதிலிருந்து அகன்று நின்று, முரண்பாடுகளை இன்னும் பெரிதாக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றது. திலீபனின் நினைவேந்தலுக்கான தடையும் அவற்றின் ஒரு கட்டமே.

இந்த இடத்தில், தென் இலங்கையைத் தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்கிற கேள்வி எழுகின்றது. இனவாதத் தீயை எரிய வைத்து, அதன் மூலம் பாரிய வெற்றியொன்றை பெற்றிருக்கின்ற ராஜபக்‌ஷக்கள் ஆட்சியில் இருக்கின்ற நிலையில், அவர்களை எதிர்கொள்வது சார்ந்து, தமிழ் மக்கள் பெரிய அளவில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.

அப்படியான நிலையில், அவர்களை நம்பிக்கையின் பக்கம் நகர்த்த வேண்டிய பொறுப்பு, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் தரப்புகளுக்கும் உண்டு. ஆனால், அவ்வாறான நிலைப்பாடுகள் இதயபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்கிற சந்தேகம் நீடிக்கின்றது.

திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை அடுத்து, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பை ஏற்று, தமிழ்த் தேசிய கட்சிகள், ஜனாதிபதிக்கான கோரிக்கைக் கடிதமொன்றில் கையெழுத்து இட்டிருக்கின்றன. அதாவது, ‘நினைவுகூருதலுக்கான உரிமையை, அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்; இல்லையேல், சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுப்போம்’ என அக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்கள்.

ஆனால், “பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர அனுமதிக்க முடியாது” என்று, அரசாங்கத்தின் பேச்சாளர் பதிலளித்திருக்கின்றார். நினைவேந்தலுக்கான தடையைப் பெறுவதற்காக, நீதிமன்றங்களில் மேற்கண்ட காரணத்தையும் பொலிஸார் கூறியிருக்கின்றார்கள்.

திலீபன் மரணிக்கும் போது, புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை என்கிற வாதத்தோடு, தமிழ்க் கட்சிகள் இப்போது நிற்கின்றன. ஆனால், தடை விதிக்கப்பட்ட அமைப்பொன்றின் தலைவரோடு, சமாதான உடன்படிக்கையொன்றை இலங்கையின் பிரதமர் ஒருவர், கடந்த காலங்களில் மேற்கொண்டிருக்கிறார் என்பதை, இன்றைய அரசாங்கம் ஏன் நினைவில் கொள்ளவில்லை?

2018ஆம் ஆண்டு காலப்பகுதியில், திலீபனின் நினைவேந்தலுக்கான தடையுத்தரவொன்றை பொலிஸார் பெற்ற போது, யாழ். மாநகர சபை அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அந்த வழக்கில் மாநகர சபைக்காக ஆஜராகி வாதாடி, தடை உத்தரவை மீளப்பெற்றார்.
2019ஆம் ஆண்டும் பிரச்சினைகள் இருக்கவில்லை. ராஜபக்‌ஷக்கள் ஆட்சி பீடமேறிய பின்னரான மாவீரர் தினத்தின் போதும், பெரிய பிரச்சினைகள் எழுந்திருக்கவில்லை. ஆனால், இப்போது திலீபனுக்கான நினைவேந்தலைத் தடுப்பதோடு, நினைவேந்தலுக்கான தடைகளைப் போடும் ஆட்டத்தை ராஜபக்‌ஷக்கள் தொடங்கி இருக்கிறார்கள். இது, 2015ஆம் ஆண்டுக்கு முன்னராக ராஜபக்‌ஷக்களின் காலத்தை மீளப் பதிவு செய்யத் தொடங்கி இருக்கின்றது.

திலீபனின் நினைவேந்தல் தடையுத்தரவுக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஒவ்வொரு தரப்பும் தனி அடையாளங்களோடு தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கினாலும், பொது விடயங்களில் ஒருங்கிணைவது, காலத்தின் கட்டாயம்.

ஆனால், அது தனிப்பட்ட நலன்கள், தேர்தல் இலாப நட்டக் கணக்கின் போக்கில் உருவாக்கப்பட்டால், மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், அவற்றுக்கான உதாரணங்கள் ஏராளம் இருக்கின்றன.

திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசியல் ரீதியாகவும் நீதிமன்றத்தின் ஊடாகவும் தமிழ்க் கட்சிகளும் அதன் இணக்கத் தரப்புகளும் முன்னெடுக்க வேண்டும். ஏற்கெனவே, 2018ஆம் ஆண்டில் இவ்வாறான தடையுத்தரவுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வாதாடிப் பெறப்பட்ட தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில், தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்த மாவை சேனாதிராஜாவை நோக்கி கேள்வி எழுகின்றது. அதாவது, தமிழரசுக் கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன், கே.வி. தவராசா என்று இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்; மற்றவர், கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்கிற பதவியோடு இருக்கிறார்.

ஆனால், திலீபனின் நினைவேந்தல் தொடர்பிலான நீதிமன்ற வழக்குகளில், இவர்கள் இருவரும் இம்முறை எந்த இடத்திலும் ஆஜராகி இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவராகவோ அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த ஒருவராகவோ இருந்த மாவையால், இவர்கள் இருவரில் யாராவது ஒருவரின் சட்ட உதவியை ஏன் பெறமுடியாமல் போனது?

தனிப்பட்ட அரசியல் நலன்கள், மோதல்களைத் தவிர்த்துவிட்டு, பொதுவான ஒருவிடயத்துக்காக இணையும் போது, இரு ஜனாதிபதி சட்டத்தரணிகளும் அரங்குக்கு ஏன் வரவில்லை? சட்டத்துறை செயலாளர் என்கிற பதவியோடு இருக்கின்ற தவராசா, இந்த விடயத்தில் ஏதாவது ஆலோசனைகளையாவது, வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு வழங்கியிருக்கிறாரா? அதுபோல, கடந்த காலத்தில் இவ்வாறான தடையுத்தரவுக்கு எதிராக வெற்றியைப் பெற்ற சுமந்திரன், ஏதாவது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறாரா? இவையெல்லாம், இரு ஜனாதிபதி சட்டத்தரணிகளையும் நோக்கிய கேள்விகள் மாத்திரமல்ல; அவர்களின் கட்சித் தலைவரான மாவையையும் நோக்கிய கேள்விகள் ஆகும்.

பொதுத் தேர்தல் காலத்தில், கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுப்பட்டு, படுதோல்வியைக் கண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சி, இன்னமும் அதேயிடத்தில் நின்று கொண்டிருப்பதான நிலையை, மேற்கண்ட காட்சிகள் மீண்டும் காட்டுகின்றன.

இவ்வாறான அரசியலால், மக்கள் ஏற்கெனவே சலிப்படைந்து இருக்கின்றார்கள். அப்படியான நிலையில், முன்னோக்கி நகர்வது என்பது, ஒரு கட்சியாக மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியலாக, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமானதுமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, சம்பவங்களுக்காக மாத்திரம் ஒன்றிணைவு என்கிற கோசத்தின் வழியாக, பெரியளவில் சாதனைகளை நிகழ்த்திவிட முடியாது.

திலீபனின் நினைவேந்தலுக்கான தடையுத்தரவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்கிற முடிவு வரவேற்கப்பட வேண்டியது. அதைப் பொறுப்போடு முன்னெடுத்த மாவை வரவேற்கப்பட வேண்டியவர்தான்.

ஆனால், அதைத் தெளிவான திட்டமிடல்களோடு அரசியல் ரீதியாகவும் நீதிமன்றத்தின் ஊடாகவும் வெற்றிகொள்ளும் பொறிமுறைகளோடு நகர்த்தியிருக்க வேண்டும். மாறாக, ராஜபக்‌ஷக்களிடம் கையளிக்கும் கோரிக்கைக் கடிதம் மாத்திரமே வெற்றியைப் பெற்றுத் தந்துவிடும் என்று நம்புவதெல்லாம் அசட்டுத்தனமானது.

புருஜோத்தமன் தங்கமயில்