நியூ டயமன்ட் கப்பல் விபத்து – சுற்று சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கை கையளிப்பு

319 0

நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் ஊடாக கப்பல் தீ விபத்தினால் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அடிப்படை விடயங்கள் உள்ளக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் விஷேட குழுவினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் ஊடாக கப்பல் தொடர்பாக எடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளது.

அத்துடன், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீடுகளை உடனடியாக முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் தொடர்பான அறிக்கை ஏற்கனவே சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 3ஆம் திகதி காலை 8 மணியளவில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த, எம்.டி. நியூ டயமன்ட் கப்பலின் பிரதான இயந்திர அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து அதில் தீ பரவியிருந்தது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சியின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.