மன்னராட்சி மோகத்தில் சகோதரனின் அதிகாரங்களைப் பெற ஜனாதிபதி முயற்சி- ஐக்கிய மக்கள் சக்தி

349 0

மன்னராட்சிக் காலத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் மோகத்தில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தனது மூத்த சகோதரனின் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஆளும் தரப்பினர், பௌத்த மதம் கூறும் போதனைகளையும் மதிக்காமலேயே செயற்பட்டு வருகின்றனர்.

ஒருவருக்குரிய அதிகாரங்களைப் பறித்தெடுப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மத போதனைக் கருத்துகளில் கூறப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனையே செய்துவருகின்றார்.

ஜனாதிபதி இவருடைய மூத்த சகோதருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மட்டுமன்றி நாடாளுமன்றம், சட்டத்துறை மற்றும் நாட்டு மக்களின் அதிகாரங்களையே பறித்துக்கொள்ள முயற்சித்து வருகின்றார்.

மன்னராட்சிக் காலங்களில் அரசாட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் சிலர் தனது தந்தை, மூத்த சகோதரன், இளைய சகோதரன் போன்ற தனது உறவினர்களையே கொலைச் செய்துள்ளதாக அறிந்துகொண்டுள்ளோம்.

தற்போது நவீனமயமானதால், அதேமுறை அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக கொண்டுவரப்படுகின்றது. ஜனாதிபதி அவரது மூத்த சகோதரனின் அதிகாரங்களைப் பறித்துக் கொள்வதற்காகவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் தெளிவுப்படுத்துவதுடன் அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுப்போம்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க முடியாவிட்டாலும் அதில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகளை மாற்றியமைப்பதற்காவது எமது போராட்டங்களால் முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஆனால், இந்தத் திருத்தத்திற்கு எமது கட்சியின் உறுப்பினர்கள் ஒருவரும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதையும் உறுதியாகக் கூறமுடியும்” என்று தெரிவித்தார்.