நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை- ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

275 0

நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 494 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.53 அடியாக உயர்ந்தது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தால், அணை விரைவில் நிரம்பிவிடும். இதனால் அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.
எனவே பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.