புத்தளம் களப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் நேற்று (22) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி சோத்துபிட்டி வாடிய பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட உதவிப்பணிப்பாளர் சரத் சந்ரனாயக்க தெரிவித்தார்.
கடற்தொழில் திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து கற்பிட்டி விஜய கடற்படையினர் மற்றும் கடற்படையின் இரகசியப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியுடைய தடைசெய்யப்பட்ட ஒருதொகுதி மீன்பிடி வலைகள், இரண்டு இயந்திரப்படகுகள் மற்றும் இரண்டு இன்ஞின்களுடன் குறித்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப்பயன்படுத்தி பிடித்த சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வலைகளும், இயந்திரப்படகு உள்ளிட்ட உபகரணங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்தொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட அலுவல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.