மலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானது – அரவிந்தகுமார்

228 0

மலையக உதவி ஆசிரியர் நியமனம் அநீதியானதும், அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் வழங்கப்பட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மலையக உதவி ஆசிரியர்களின் நியமனம் குறித்த சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதில் பங்கேற்று உரையாற்றிய போதே அரவிந்தகுமார் இதனை தெரிவித்தார்.

மேலும், பட்டதாரிகளாக வேண்டும் என்ற விதியும், ஆசிரியர் பயிற்சி கல்வியற் கல்லூரிகளில் பயிற்சிகளை பெற வேண்டும் உள்ளிட்ட பல விதிகளுடனே இந்த நியமனம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும், இந்த விதிகளுக்கு அமைய நியமனங்களை பெற்றவர்கள் தற்போது அந்த அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தும் அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இதுவரை வழங்கப்படாதுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது, மாகாண கல்வித் திணைக்களம் ஆமை வேகத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, தற்போதைய நிலையில் ஆசிரியர்களாகவும் இல்லாமல் சிற்றூழியர்களாகவும் இல்லாமல் மலையக உதவி ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அவர் கூறினார்.

ஆகவே மலையக உதவி ஆசிரியர்கள் இரண்டும் கெட்டான் நிலைமையில் பல்வேறு குடும்ப பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எனவே இது அநீதியானதும். அப்பட்டமான மனித உரிமைகளை மீறும் செயலாகவே அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க கல்வியமைச்சு விரைவானதும், அக்கறையுடனும் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த நல்லாட்சியில் பட்டதாரி ஆசிரியர் நியமனம், தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயற்சி பெற்றவர்களுக்கான நியமனம் என்பன வழங்கப்பட்டதாகவும் எனவே நல்லாட்சியில் நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள தயாரில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.