20வது சட்டமூலத்தினால் இலங்கை சர்வதேச ரீதியாக பல அழுத்தங்களை எதிர்கொள்ள நேரும் – லக்ஷமன்

231 0

20வது திருத்தச் சட்டமூலத்தினால் சர்வதேச ரீதியாக இலங்கை பல அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுயாதீன ஆணைக்குழுக்களை ஐக்கியத் தேசியக் கட்சி ஸ்தாபிக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கமே சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தது.

17ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழு மட்டுமன்றி, பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்தும் கொண்டுவரப்பட்டது. அதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தினர் அன்று வாக்களித்தார்கள். பின்னர் 18ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்து சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்யவும் இவர்கள் வாக்களித்தார்கள்.

பின்னர் 19-இல் மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்கள் கொண்டுவரப்பட்டமைக்கும் ஆதரவு தெரிவித்து, மீண்டும் 20இன் ஊடாக அவற்றை இல்லாது செய்ய முற்படுகிறார்கள்.

நாம் தேர்தல்களில் தோல்வியடைந்தாலும் ஒரு கொள்கையின் கீழ்தான் இதுவரை பயணித்துக்கொண்டிருக்கிறோம். அரசாங்கத் தரப்புக்குத்தான் ஒரு கொள்கையொன்று இல்லை. காலத்துக்குக் காலம் அவர்களின் கொள்கை மாறிக்கொண்டே செல்கிறது.

20இன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்பட்டால் நாம் மீண்டும் பின்நோக்கி நகரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு உள்ளாவோம்.

தனியொரு நபருக்கு அனைத்து அதிகாரங்களையும் கொடுப்பது சரியா என்று கேட்க விரும்புகிறோம். எமது காலத்தில் அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. மக்கள் நிம்மதியாக இருந்தார்கள். இவை அனைத்தையும் இல்லாது செய்யவே அரசாங்கம் முற்படுகிறது.

இதனால்தான், 20இற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். நாடாளுமன்றின் பலம் இதனால் இல்லாது போய்விடும். யாரை வேண்டுமானாலும் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கலாம்.

பிரதமருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லாது போய்விடும். இப்போதே இந்த விவகாரம் சர்வதேச ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது. இது சர்வதேச ரீதியாக எமக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். அவர்கள் இப்போதும் இதுதொடர்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

20இற்கு ஆதரவளிப்பது என்பது எதிர்கால சந்ததியினரை காட்டிக்கொடுப்பது போன்றதாகும். இலங்கை வரலாற்றினால் 20இற்கு ஆதரவானவர்கள் குப்பைத் தொட்டியிலேயே போடப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.