குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு- அணைகள் நீர்மட்டம் உயர்வு

227 0

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது. இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நேற்று காலையில் குற்றாலம் அருவிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோல் ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியை ஓரமாக நின்று தண்ணீர் கொட்டும் அழகை ரசித்துச் சென்றனர்.

களக்காடு தலையணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள தடுப்பணையை மூழ்கடித்தப்படி வெள்ளம் பாய்ந்து செல்கிறது. சாரல் மழை நீடிப்பதால் குளுகுளுவென இதமான சூழலும் நிலவுகிறது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை 143 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 85.30 அடியாக இருந்தது. நேற்று 2.80 அடி உயர்ந்து 88.10 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 384 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் உள்பகுதியில் இருக்கும் பாணதீர்த்தம் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துப் ஓடுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,271 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 95.47 அடியில் இருந்து 101.18 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது ஒரே நாளில் நீர்மட்டம் 5.71 அடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்து உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 812 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 680 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு, அடவிநயினார் அணைகள் ஏற்கனவே நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையும், கடையம் அருகே உள்ள ராமநதி அணையும் தற்போது நிரம்பி உள்ளன.

72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 114 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 100 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இந்த அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 90 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 79 அடியாக இருந்தது. அணைக்கு 365 கனஅடி தண்ணீர் வந்தது. 60 கன அடி தண்ணீர் அணை பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுகிறது. இந்த அணையும் விரைவில் நிரம்ப உள்ளது.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம் 31, சேர்வலாறு 12, மணிமுத்தாறு 6, கொடுமுடியாறு 25, அம்பை 1, ராதாபுரம் 19, கடனாநதி அணை 16, ராமநதி 20, கருப்பாநதி 30, குண்டாறு 40, அடவிநயினார் 55, ஆய்க்குடி 4, செங்கோட்டை 19, சிவகிரி 3, தென்காசி 19.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், பெரியகொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசபாளையம், அத்தாணி சவுண்டப்பூர், கீழ்வாணி, மூங்கில்பட்டி, ஆப்பக்கூடல், சென்னிமலைகவுண்டன்புதூர், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரிபுதூர், தளவாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடப்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது எனவும், ஆற்றங்கரையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் செல்லும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.