யேர்மனியில் நடைபெற்ற தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகள்.

1781 0

தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் தமிழ்த்திறன் போட்டியின் 2019ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப்போட்டி கோவிட்19 என்ற கொடியநோய்த் தொற்றினால் பெப்ரவரிமாதம் நடைபெறாது பிற்போடப்பட்டது அனைவரும் அறிந்ததே.

ஆறு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கோவிட்19 இடையறாது தொற்றி வருகின்றது. இந்நிலையில் தமிழ்த்திறன் இறுதிப் போட்டியை இரு பிரிவுகளாகப் பிரித்து நடாத்தும் திட்டம் வகுக்கப்பட்டு, பின் வரும் போட்டிகள் கட்டுரை, உறுப்பமைய எழுதுதல், ஓவியம் என்பன நாடு முழுவதிலும் 12 விசேட நிலையங்களில் சென்ற 13.09.2020 சிறப்பாக நடைபெற்றன. போட்டிகளில் 200ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

ஏனைய 350ற்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கான கவிதை, உரையாற்றல், வாசித்தல், மனனம், சொல்வதெழுதுதல் போன்ற போட்டிகள் 19.09.2020 சனிக்கிழமை யேர்மனி கிறீபெல்ட் நகரத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பு இருந்த ஐந்தாவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை நினைவு கூரும் வகையில் தமிழ்த்திறன் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்தினை சிறப்பான ஒரு இடத்தில் வைத்து கல்விக்கழகச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் தியாக தீபத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கத்தைச் செலுத்தினார்கள்.

அதன் பின்னர் தமிழ்த்திறன் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டிகளில் யேர்மனி முழுவதும் இருந்து வந்த தமிழாலய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.