சமூக அக்கறையுள்ள பலர் கடந்த சில ஆண்டுகளாக மரம் வளர்ப்பில் அக்கறை காட்டி வருகின்றனர். நகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமங்களில் இது நல்ல பலனை அளித்திருக்கிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரான அருந்தவத்தின் கணவர் கருப்பையா, பொது முடக்கக் காலத்தையொட்டி, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கிராம இளைஞர்களை ஒன்றிணைத்து கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எழுத்தூர் கிராம இளைஞர்கள் தங்கள் கிராமத்தின் தாழ்வானப் பகுதிகள், சாலையோரம், ஏரி மற்றும் வாய்க்கால் கரைப் பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதை தவிர பனை விதைகளையும் தயார் செய்து விதை உருண்டையாக வெலிங்டன் ஏரிக் கரைகளில் வீசி வருகின்றனர்.
இது தொடர்பாக கருப்பையா கூறும்போது,
“மானவாரி நிலங்களை கொண்ட எங்கள் பகுதியில் மக்காச்சோளம் பருத்தி மட்டுமே பெருமளவில் பயிரிடப்படும். எங்கள் பகுதி இளைஞர்கள் பொருளாதார தேவைக்காக வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று விடுவர். இதன்மூலம் கிராமத்தில் தனி நபர் வருவாய் பெருகிய போதிலும், கிராமம் வறண்ட பூமியாகவே இருந்து வந்தது. கரோனா தொற்றால் சொந்த கிராமத்திற்கு திரும்பிய இளைஞர்களுடன் கைகோர்த்து, மண்ணிற்கும் மக்களுக்கும் பயன்படும் மரங்களையும், கால்நடைகளுக்கு உகந்த மரக் கன்றுகளையும் நட்டு பராமரித்து வருகிறோம்.என் மனைவி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதால், மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக அரசு அலுவலகங்கள், மக்களை அணுகும் விஷயங்கள் எளிதாக உள்ளது“ என்கிறார்.