ரபேல் போர் விமானத்தை விரைவில் பெண் விமானி இயக்குவார் எனவும், இதற்காக விமானப்படை பெண் அதிகாரி ஒருவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் விமானப்படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் முதல் தொகுதியாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தன. அவை அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில் விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.
நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கையாளும் திறன் பெற்ற இந்த தாக்குதல் ரக விமானங்களை இயக்குவதற்கு சிறப்பு பயிற்சி பெற வேண்டும். அந்தவகையில் இந்த விமானங்களை இயக்குவதற்கு இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தியா வந்துள்ள ரபேல் போர் விமானங்கள் பயிற்சி மற்றும் கண்காணிப்பு பணிகளை ஏற்கனவே தொடங்கி உள்ளன. குறிப்பாக லடாக்கில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு படைகளின் தயார் நிலையை உறுதிப்படுத்துவதற்காக ரபேல் போர் விமானங்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் ரபேல் போர் விமானங்களை இயக்குவதற்கு பெண் விமானிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தவகையில் முதல் பெண் விமானி விரைவில் ரபேல் போர் விமானத்தை இயக்குவார் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்காக மிக்-21 தாக்குதல் ரக விமானங்களை இயக்கி வரும் பெண் அதிகாரி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் விமானப்படையில் பெண் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 1,875 ஆகும். இதில் 10 பேர் தாக்குதல் ரக விமானங்களின் விமானியாகவும், 18 பேர் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே கடற்படையில் பணியாற்றி வரும் துணை லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் துணை லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய 2 பெண் அதிகாரிகள் முதல் முறையாக போர்க்கப்பல்களில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கடற்படையின் ‘அப்சர்வர்’ பயிற்சியை முடித்த இவர்கள் உள்பட 17 பேருக்கு நேற்று கொச்சியில் ஐ.என்.எஸ். கருடா போர்க்கப்பலில் வைத்து பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கடற்படை ஊழியர் தலைமை அதிகாரி (பயிற்சி) ஆண்டனி ஜார்ஜ் கலந்து கொண்டு பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும், விருதுகளையும் வழங்கினார். இதில் ஒரு பெண் உள்பட 5 கடற்படை அதிகாரிகளும், ஒரு கடலோர காவல்படை அதிகாரியும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆன்டனி ஜார்ஜ், கடற்படை கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்களை இயக்க பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் முன்னணி போர்க்கப்பல்களில் பெண்களும் பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.