இரட்டைக்குடியுரிமையுடைய ஒருவர் பாராளுமன்றத்திற்கு வரக்கூடிய வாய்ப்பை அரசாங்கம் அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கான காரணம் என்ன? இதனூடாக வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் வடக்கு – கிழக்கிற்கு வந்து இனவாதத்தைப் பரப்பி, அதிகாரபீடத்திற்கு வருவார்களாயின், அதற்கு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்கள் பொறுப்புக்கூறுவார்களா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டுமக்களின் நலனுக்காகவும் அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் ஊடாக வென்றெடுத்த ஜனநாயக உரிமைகளைப் பறித்துக்கொள்வதற்கு குறித்தவொரு தரப்பு முயற்சிக்கின்றது எனின், அதற்கு எதிராகப் போராட வேண்டியது அனைத்துப் பிரஜைகளினதும் கடமையாகும் என்றும் அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு ஐ.தே.க தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
உலகநாடுகள் அனைத்தும் ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், நீதிமன்றத்தின் சுயாதீனத்துவம், தேர்தல்கள், பொதுச்சேவை, பொலிஸ் சேவை உள்ளிட்ட கட்டமைப்புக்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் உட்படாமல் பக்கச்சார்பின்றி சுயாதீனமாக செயற்படக்கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்துவதை நோக்காகக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், இக்கட்டமைப்புக்கள் அனைத்திலும் அரசியல் தலையீட்டை ஏற்படுத்தி தமது தரப்பைப் பலப்படுத்திக்கொள்வதை இலக்காகக்கொண்டு தற்போதை அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 19 வது திருத்தை நிறைவேற்றிக்கொண்டதன் ஊடாக நாம் வென்றெடுத்துக்கொடுத்த ஜனநாயக உரிமைகளை மீண்டும் பறித்துக்கொள்வதற்கான முயற்சிகள் குறித்தவொரு தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றதெனின், அது இந்நாட்டின் வரலாற்றில் இழைக்கப்படுகின்ற பாரிய தவறாக இருக்கும் என்றே நாங்கள் நம்புகின்றோம்.
ஜனாதிபதியின் வசமிருந்த மட்டுமீறிய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம், பொலிஸ் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவை, கண்காய்வு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் தமக்கு வேண்டிய விதமாக நிர்வகித்த சம்பவங்களுக்கு வரலாறு சாட்சியாக இருக்கின்றது. எந்தக்கட்சி அல்லது எந்த நபர் தவறிழைக்கின்றார் என்று தர்க்கித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, அத்தகைய தவறுகள் இடம்பெறக்கூடிய சூழ்நிலைகள் உருவாவதைத் தடுத்து ஜனநாயகத்தை நோக்கி நாட்டை நகர்த்திச்செல்லும் சட்டங்களை உருவாக்குவது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.
இவையனைத்தையும் நன்று அறிந்திருந்தும்கூட, தனியொரு குடும்பம் இந்த நாட்டை ஆட்சிசெய்வதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.
அரசியலில் தாம் எந்தத்தரப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டுமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்களை முன்நிறுத்தித் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அரசியல்வாதிகள் தவறுவார்களாயின் அது மீண்டும் ஒருபோதும் திருத்திக்கொள்ள முடியாத பெரும் பிழையாகவே அமையும்.
நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். பிரஜையொருவர் தவறிழைத்தாலும் கூட ஜனாதிபதி தவறிழைக்கக்கூடாது. எனினும் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்படும் ஜனாதிபதி நாட்டின் வழமையான சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவரல்ல. நாட்டின் நிர்வாகம் அல்லது வேறு விடயங்களில் தனக்கு விரும்பியவாறு செயற்பட்டுவதுடன், தவறிழைத்தாலும் கூட சட்டத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு அவரால் முடியும்.
இவ்வாறான நிலை ஜனநாயக நாடொன்றிற்கு எவ்வளவு தூரம் ஆபத்தானது என்பதை அறிவுடையோரால் புரிந்துகொள்ள முடியும். அதேபோன்று இத்தகைய பாரதூரமான – பாசிஸ போக்குடைய திருத்தமொன்றைக் கொண்டுவருவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதன் நோக்கம் என்னவென்பது அடுத்த மிகமுக்கிய கேள்வியாகும்
இரட்டைக்குடியுரிமையுடைய ஒருவர் பாராளுமன்றத்திற்கு வரக்கூடிய வகையில் அரசியலமைப்பின் ஊடாக வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன? இதனூடாக வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் வடக்கு, கிழக்கிற்கு வந்து இனவாதத்தைப் பரப்பி, அதிகாரபீடத்திற்கு வருவார்களாயின், இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்கள் அதற்குப் பொறுப்புக்கூறுவார்களா? அதேபோன்று 20 வது திருத்தம் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையையும் இல்லாமல் செய்வதற்கு தயாராகியிருக்கிறார்கள்.
ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக ஐந்துவருட காலத்திற்கு ஜனாதிபதியொருவரும் பொதுத்தேர்தலின் ஊடாக ஐந்துவருட காலத்திற்கு பாராளுமன்றமும் நியமிக்கப்படுவதை மறந்துவிட்டு, ஜனநாயகத்தை முற்றிலும் புறந்தள்ளி அனைத்தையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவர் தான் விரும்பியவாறு நிர்வகிக்கக்கூடியவாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அமைச்சரவைக்கு அதிகளவானோர் நியமிக்கப்படுவதன் காரணமாக ஏற்படக்கூடிய வீண்செலவுகள், முகாமைத்துவ சிக்கல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே 19 வது திருத்தத்தின் மூலமாக அமைச்சரவை அமைச்சர்களின் உச்சபட்ச எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டது. எனினும் அதனையும் நீக்கும் வகையிலான திருத்தத்தை சமர்ப்பித்திருப்பதன் ஊடாக பலருக்கும் வௌ;வேறு வரப்பிரசாதங்களுடன் கூடிய அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொடுத்து, தமது அணியைப் பலப்படுத்திக்கொள்வதையே இந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இந்நிலையில் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் ஒட்டுமொத்தமாக நாட்டை சீரழிப்பதாகவே அமையும். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகக் குரலெழுப்பிய மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான இயக்கம், சிவில் சமூகக்குழுக்கள் உள்ளடங்கலாக ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசியல் குழுக்களின் போராட்டத்தின் விளைவாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 19 வது திருத்தத்திற்கு தன்னந்தனியாக உரிமைகோரிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதை அதனை வலுவிழக்கச்செய்யும் வகையில் 20 வது திருத்தத்தை முன்நிறுத்தும் தரப்பினரின் பக்கம் நிற்கின்றார்.
இன்றளவில் நாடு சமூக, பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வது குறித்து மக்களைத் தெளிவுபடுத்தாமல் தத்தமது அரசியல் நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு மக்களைத் திசைதிருப்பி தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சித்துவருவது கவலையளிக்கிறது. எனவே அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிரான அனைத்துத்தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு, போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது. ஒட்டுமொத்த நாட்டுமக்களின் நலனுக்காகவும் வென்றெடுத்த ஜனநாயக உரிமைகளைப் பறித்துக்கொள்வதற்கு குறித்தவொரு தரப்பு முயற்சிக்கின்றது எனின், அதற்கு எதிராகப் போராட வேண்டியது அனைத்துப் பிரஜைகளினதும் கடமையாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.