சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – இன்று முதல் புதிய திட்டம் அமுல்!

248 0

கொழும்பின் 4 மார்க்கங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் ஆலோசனை வழங்கும் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோரை அடையாளம் காணும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களின் நலன் கருதி கொழும்பு நகரிலும் அதனை அண்மித்த நகர்ப்புறங்களிலும் அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் உரிய வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர்.

பேருந்துகளுக்காக தனியான வழித்தடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளும் குறித்த வீதிகளில் அதே வழித்தடங்களில் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இந்த நடைமுறை எதிர்வரும் நாட்களிலும் தொடரவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த வாரத்தை போலல்லாது வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகள் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ட்ரோன் கமெரா மூலம் வாகன போக்குவரத்து கண்காணிக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க குறிப்பிட்டுள்ளார்.

விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு குறித்த பகுதியில் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் குறித்த வாகனத்தை பதிவு செய்த உரிமையாளரை அடையாளங்கண்டு விபரங்கள் திரட்டப்படவுள்ளன.

அவ்வாறு திரட்டப்படும் விலாசங்களுக்கு, வீதி நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ஆலோசனை வகுப்புகளில் பங்கேற்குமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்படவுள்ளது.

தவறிழைத்த சாரதிகள், குறித்த வகுப்புகளுக்கு சமூகமளிப்பது கட்டாயமானது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.