தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றனர். அதேநேரம், உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்நாட்டினதும் சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இறுதியாக தொற்று உறுதியான மூவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 88 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, இந்த கொடிய தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.