தானே தன்னை சிலுவையில் அறைந்து தன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ம் திகதி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் பட்டினிகிடந்து தமிழீழ விடிவுக்காய் தன்னை ஈகம் செய்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு பிரித்தானிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
தற்போதைய பிரித்தானியச் சட்டத்திற்கு உட்பட்டு பாரிய அளவில் ஒன்று கூட முடியாத சூழலில்
இணைய வழியூடாக (zoom) 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை 12 நாட்களும்
மாலை 7 மணி முதல் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இன்று (18.09.2020) 4ம் நாள் வணக்க நிகழ்வினை பிரித்தானிய வடமேற்கு பகுதியினர் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.
தாயக விடிவுக்காய் தம் இன்னுயிரைத் ஈகம் செய்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு திலீபன் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர்வணக்கம் தீபவணக்கம் இடம்பெற்றிருந்தது. திலீபன் அண்ணாவின் நினைவு சுமந்த கவிதைகள் எழுச்சி உரைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தது.
2009 இற்கு முன் தாயகத்தில் 12 நாட்களும் நினைவாலயம் அமைத்து வணக்கம் செலுத்தியது போலவே பிரித்தானியாவிலும் திலிபன் அண்ணாவிற்கான நினைவாலயம் அமைக்கப்பட்டு அந்த நினைவாலயத்திலே அவருக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என்று முழங்கிய திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வில் உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் கீழுள்ள இனையவழியினூடாக இனைந்து வணக்கம் செலுத்தலாம்.