கோவையில் அங்கன்வாடி குழந்தைகள், கர்ப்பிணி கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் ‘ஊட்டச்சத்து தோட்டம்’ அமைக்கப்பட்டு வருகிறது.
சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலமாக உக்கடம் பைபாஸ் பகுதி சிவராம் நகரில் உள்ள அங்கன்வாடி மைய வளாகத்தில் அமைக்கப்படும் இத்தோட்டத்தில் வெண்டை, கத்தரி, பச்சை மிளகாய், பசலைக் கீரை, கேழ்வரகு, தினை, பூசணி, பாகற்காய் உள்ளிட்ட சத்து மிகுந்த காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இதேபோல, பல்வேறு இடங்களில் தோட்டம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மீனாட்சி கூறும்போது, “போஷன் அபியான் திட்டம் மூலம் வீட்டுத் தோட்டம் அமைத்து, இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்யஊக்குவிக்கப்படுகிறது. வீட்டில் இடவசதி இல்லாதவர்கள், சிமென்ட், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் சாக்கு, பக்கெட், தண்ணீர் பாட்டில் போன்றவற்றிலும் காய்கறிச் செடிகளை வளர்க்கலாம். மாடிகளிலும் தோட்டம் அமைக்கலாம். உரக்குழி அமைத்து பச்சை இலைகள், காய்ந்த இலைகள், வீடுகளில் உற்பத்தியாகும் காய்கறி, பழக் கழிவுகள், மாட்டுச் சாணம் ஆகியவற்றை மக்கச் செய்து இயற்கை உரமாக செடிகளுக்குப் பயன்படுத்தலாம். சத்து மிகுந்த, ஆரோக்கியமான காய்கறிகள் கிடைக்கும்.
மாவட்டத்தில் போஷான்மா திட்டத்தில் சமுதாய ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுவான இடத்தைத் தேர்வு செய்து,வேளாண் துறையிடமிருந்து விதைகள், மரக்கன்றுகள் வாங்கி, சாகுபடி செய்யப்பட உள்ளது. அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலமாக தோட்டத்தைப் பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.