அமெரிக்காவில் டிக்-டாக் வீ-சாட் செயலிகளுக்கு தடை: நாளை முதல் அமலுக்கு வருகிறது

257 0

சீனாவைச் சேர்ந்த வீடியோ பகிர்வு செயலியான டிக்-டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலி வீ சாட் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாளை முதல் இதை செயல்படுத்தப் போவதாக தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அதிபர் ட்ரம்ப் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்படி கொடுக்கப்பட்ட 45 நாள் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. தேசப் பாதுகாப்பு கருதி இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

பயனாளர்களின் தகவல்களை திரட்டியுள்ளதாகவும் இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அமெரிக்க வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து அது தொடர்பான தகவல்களை அளித்துள்ளனர். ஆனால் இதை சீன நிறுவனங்கள் மறுத்துள்ளன.

அமெரிக்கா – சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால் சீன தயாரிப்புகள் அனைத்துக்கும் அமெரிக்காவில் கடும் கெடுபிடி விதிக்கப்படுகிறது.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டி தவறாக பயன்படுத்த சீன நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சியைத் தடுக்கும் விதமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வில்புர் ரோஸ் தெரிவித்துள்ளார்.