அபுதாபியில், விசா பெற்றவர்கள் மற்ற விமான நிலையங்களுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

251 0

அபுதாபியில் குடியேற்ற விசா பெற்று நாடு திரும்பும் விமான பயணிகளுக்கு ‘குவாரண்டைன்’ கைப்பட்டைகள் அணிவிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மற்ற பகுதி விமான நிலையங்களுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அபுதாபி நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி விளக்கமளித்துள்ளது.

அபுதாபி நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் குடியிருப்பு விசா பெற்ற பயணிகளுக்கு விமான நிலையத்தில் ‘குவாரண்டைன்’ கைப்பட்டை இலவசமாக அணிவிக்கப்பட்டு வருகிறது. இதில் விமானத்தில் இருந்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழையும் பயணிகளுக்கு குடியேற்ற பிரிவு சோதனை முடிவடைந்த பிறகு இந்த பட்டைகளானது அணிவிக்கப்படுகிறது.

இந்த கைப்பட்டைகளை அணிந்து 14 நாட்கள் தங்களை அந்த விமான பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த கைப்பட்டைகளை வைத்து வெளிநாட்டில் இருந்து வருகை தரும் பயணிகள் கண்காணிக்கப்படுவர். தற்போது அபுதாபி குடியிருப்பு விசா பெற்றவர்கள் துபாய், சார்ஜா போன்ற மற்ற அமீரகங்களுக்கும் வருகை புரிந்து வருகிறார்கள்.

அவர்களின் நிலை குறித்து சந்தேகங்கள் எழுப்பட்டு வருகிறது. இதில் ஒருவேளை அபுதாபி விசா பெற்ற ஒருவர் வேறு பகுதியில் வருகை புரிந்து அபுதாபி நகருக்கு வரும் நிலையில் கட்டாயமாக அவரும் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு வரும்போது அபுதாபி எல்லைப்பகுதியில் அமீரகத்திற்கு வந்து சேர்ந்த நாள் என்ன? என்பதற்கு சாட்சிய ஆவணங்களை அளிக்க வேண்டும்.

அப்போது வெளிநாட்டில் இருந்து அமீரக எல்லைக்குள் வந்து 14 நாட்களுக்கும் குறைவான காலத்திற்குள் அபுதாபிக்குள் நுழைந்தால் கட்டயாம் எல்லையில் பி.சி.ஆர் மருத்துவ சோதனையை மேற்கொள்ள வேண்டும். பிறகு அங்குள்ள சோதனை சாவடியில் அதிகாரிகளால் ‘குவாரண்டைன்’ கைப்பட்டைகள் வழங்கப்பட்டு, தனிமைப்படுத்தலுக்கான பதிவு செய்யப்படும்.

அதேபோல் மற்ற அமீரகங்களில் தங்கியிருந்த நாட்கள் கழிக்கப்பட்டு 14 நாட்களில் மீதியுள்ள நாள் அபுதாபியில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் மற்ற அமீரகங்களின் விசா பெற்றவர்கள் பயணம் செய்யும் 96 மணி நேரத்திற்கு முன்னதாக பி.சி.ஆர் சோதனை செய்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து அபுதாபியில் டி.பி.ஐ லேசர் சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என முடிவு வரும் வரை வேறு பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.