பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து விலகினால் சலுகைகளை வழங்குவதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ நேற்று மூன்றாவது நாளாகவும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கினார்.
இதன்போதே, ஓய்வூதியம் மற்றும் பூஜித் ஜயசுந்தர பணியாற்ற விரும்பும் எந்த நாட்டிலும் தூதுவராக பணியாற்ற ஒரு பதவி என்ற சலுகை வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் இந்த அறிவிப்பின் பின்னர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர இது தொடர்பாக தனது ஆலோசனையைப் பெற வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் தன்னால் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் விடயத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் இது ஒரு தீவிரமான பிரச்சினை என்பதனால் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிக்குமாறு தான் கேட்டுக்கொண்டதாகவும் ஹேமசிரி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
அத்தோடு பயங்கரவாத தாக்குதல்களுக்கான காரணங்கள் மற்றும் பின்னணியை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான ஆணைக்குழுவில் இருந்து விடுவிக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ஜயசுந்தரவுக்கு தெரிவித்திருந்தார் எனவும் ஹேமசிரி பெர்னாண்டோ கூறியுள்ளார்.