கொரோனா விஷயத்தில் படித்தவர்களும் அலட்சியமாக உள்ளனர். பொதுமக்கள் மெத்தனமாக இருந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் எச்சரித்தார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வில் பெரும்பாலானவர்கள் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் இருந்துவிட்டு முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் இறப்பு ஏற்பட்டு இருப்பது தெரியந்துள்ளது. விவரம் தெரிந்தவர்கள், டாக்டர்கள் குடும்பத்திலும்கூட இதே நிலை உள்ளது. கொரோனா விஷயத்தில் மெத்தனமாக இருந்துள்ளனர். அப்படி இருந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்களில் வந்து ஆஸ்பத்திரிகளில் சேருகின்றனர். இதனால் பலருக்கும் கொரோனா பரவுகிறது. இதை தடுக்க இனிமேல் ஆம்புலன்சுகள் மூலமாக வருபவர்களை மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்க உள்ளோம். அரசு வசம் உள்ள ஆம்புலன்சுகள் அனைத்தும் இனிமேல் நோயாளிகளை ஏற்றிவர பயன்படுத்தப்படும்.
முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதியில் தொற்று அதிகமாக உள்ளது. நெல்லித்தோப்பு பகுதியில் ஓரிடத்தில் 3 நாட்கள் சோதனை நடந்தது. வீடுவீடாக சென்று சோதனை செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அங்கு வசித்த ஒரு முதியவர் கொரோனா அறிகுறி இருந்தும் அப்போது சோதனை செய்ய முன்வரவில்லை.
அதன்பின் ஆஸ்பத்திரிக்கு வந்து சோதித்து பார்த்தபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்துவிட்டார். அவரது 8 வயது பேரனுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.
பழைய பஸ் நிலைய பகுதியில் வயதான தம்பதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களது மகனும், மருமகளும் டாக்டர்கள். அவர்கள் 4 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன்பின் வயதான தம்பதி மட்டும் இங்கு வந்து தங்கி உள்ளனர். இதுகுறித்த விவரங்கள் எதையும் சுகாதாரத் துறைக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் அந்த முதியவர் இறந்துவிட்டார். படித்தவர்கள் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.
கொரோனா பணிகளுக்கு என மத்திய அரசு இதுவரை ரூ.3.80 கோடிதான் தந்துள்ளது. புதுவை அரசு நிதியில் இருந்து ரூ.6.42 கோடி செலவு செய்துள்ளோம். மத்திய அரசிடம் இதற்காக ரூ.139 கோடி கேட்கப்பட்டது. ஆனால் அந்த நிதி கிடைக்கவில்லை. புதுவை பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி, முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதி ஆகியவற்றில் இருந்து வரும் நிதியை கொண்டு செலவிட்டு வருகிறோம்.
ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பயன்பாட்டிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் செலவிடப்படுகிறது. கொரோனா நோயாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு சாப்பாட்டிற்காக ரூ.225 செலவிடப்படுகிறது. போதிய மருந்து மாத்திரைகள், உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.