அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். அவர் பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து இருக்கிறார்.
இந்தநிலையில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து எமி டோரிஸ் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
கடந்த 1997-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார்.
அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது என்னிடம் டிரம்ப் தவறாக நடந்துகொண்டார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றார். என் விருப்பத்துக்கு மாறாக என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவரது பிடியில் இருந்து நான் வெளியேற முயன்றபோது அது முடியாமல் போய் விட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போதே இந்த விசயத்தை வெளியே சொல்ல நினைத்தேன். ஆனால் எனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் சொல்லவில்லை. இப்பொழுது எனது மகள்கள் வளர்ந்து விட்டார்கள்.
உங்கள் விருப்பம் இல்லாமல் யாரும் உங்களிடம் செயல்படக்கூடாது என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்பதால் தைரியமாக இப்போது இதை சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எமி டோரிஸ் கூறும் சம்பவம் நடந்தபோது அவருக்கு 24 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் 23 ஆண்டுகள் கழித்து அவர் மீது முன்னாள் மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, ‘எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு எமி டோரிசை ஏவி விட்டிருக்கிறார்கள்’ என்றார்.
ஏற்கனவே டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.