நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபருக்கு பிணை!

366 0

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணம் மாநகர சபை சாரதியை பிணையில் விடுவிக்க கோப்பாய் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததால் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பிரதேச சபைச் செயலாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிஸாரின் அனுமதியுடன் தாக்குதல் நடத்திய அரச ஊழியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்கு நேற்று(வியாழக்கிழமை) சென்ற அரச ஊழியர், செயலாளரை அவரது அலுவலகத்தில் வைத்துத் தாக்கினார்.

நல்லூர் அரசடியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் சாரதி,  திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள உறவினரின் கடை தொடர்பில் பிரதேச சபைச் செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்து முரண்பட்டுள்ளார்.

அதனால் பிரதேச சபைச் செயலாளரை அந்த நபர் தாக்கியுள்ளார். தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட போதும், அவரை தடுத்துவைத்த பிரதேச சபை ஊழியர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நல்லூர் பிரதேச சபையின் செயலாளரின் முறைப்பாட்டுக்கு அமைய யாழ்ப்பாணம் மாநகர சபையின் சாரதிக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அரச அதிகாரியை பலாத்காரமாக அடக்க முற்பட்டமை, நபர் ஒருவரைத் தாக்கியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர் மன்றில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பொலிஸார் தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

பாதிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சார்பில் சட்டத்தரணி எஸ்.சோபிதன், சந்தேக நபரை பிணை விடுவிப்பதால் சாட்சிக்கு அச்சுறுத்தல் என்பதை முன்வைத்து பிணைக்கு எதிராக சமர்ப்பணம் செய்தார்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டதரணி மு.றெமிடியஸ், பிரதேச சபையின் செயலாளரே சந்தேக நபரை அலுவலகத்துக்கு அழைத்ததாகவும் அவர் சாதியை இழுத்துப் பேசியதாகவும் சமர்ப்பணம் செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதி வழங்கி கட்டளை வழங்கியது.

“10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையையும் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையையும் சந்தேக நபர் மன்றில் முன்வைக்க வேண்டும். அத்துடன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தேக நபர் கோப்பாய் போலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும்” என்று பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.