ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு கோரிக்கை ஏதேனும் முன்வைக்கப்பட்டால் கட்சியின் செயற்குழுவில் அது குறித்து ஆராயப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவருமான காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜயவர்தனவின் 114 ஆவது ஜனன தின வைபவம் இன்று வியாழக்கிழமை தேசிய ஊழியர் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் குறிப்பிடுனையில்
கேள்வி : ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பின் போது தலைமைத்துவமே மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரதி தலைவரே நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் எப்போது தெரிவு செய்யப்படுவார் ?
பதில் : கட்டம் கட்டமாகவே கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமை ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்களும் எதிர்வரும் காலங்களில் நியமிக்கப்படுவர். தலைமைத்துவம் தொடர்பில் கட்சியின் செயற்குழுவிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படும்.
கேள்வி : தற்போது செய்யப்படுகின்ற மாற்றங்களை பொதுத் தேர்தலுக்கு முன்னரே செய்திருந்தால் சிறப்பான பெறுபேருகளை பெற்றிருக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா ?
பதில் : அவ்வாறு கூற முடியாது. தேர்தலுக்கு முன்னரே மாற்றங்களைச் செய்வது தொடர்பில் ஆராயப்பட்ட போதிலும் பெரும்பாலானவற்றை செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அதனை சில தரப்பினர் அப்போது புரிந்துகொள்ளவில்லை. ஒன்றாக பயணிக்க வேண்டும் என்று நாம் எண்ணிய போதிலும் சஜித்தரப்பினர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றனர். தற்போது யாரும் வெற்றி பெறவில்லை. பிரிவதால் எவ்வித பயனும் இல்லை என்பதை தற்போது அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள்.
கேள்வி : எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு எதிர்பார்க்கிறீர்களா ?
பதில் இதுவரையில் அவ்வாறு ஒரு யோசனை கட்சிக்குள் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் செயற்குழுவிலிலேயே அது தொடர்பில் தீர்மானிக்க முடியும்.
கேள்வி : இன்றைய வைபவத்தில் கட்சி தலைவர் ஏன் பங்குபற்றவில்லை?
பதில் – புதிய தலைமுறைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறிருக்கையில் தற்போது ஏன் வரவில்லை என்று கேள்வியெழுப்புகிறீர்களே என்றார்.