சட்டவிரோதமான முறையில் போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 12 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர்கள் 16ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டாரின் ஊடாக கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் குடியேற முற்பட்ட 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிபத்கொட, பமுனுகம, கேகாலை, மாவனெல்ல, பொல்கஹவெல, அலவத்துகொட, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள் 07 பேரும் பெண்கள் 05 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில், சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு உதவிய பெண்ணும் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த பெண், பத்தரமுல்லை பகுதியில் மொழி கற்கை மற்றும் வீசா பெற்றுக்கொடுக்கும் நிலையமொன்றை நடத்தி சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 6 இலட்சம் பெறுமதியான சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பயணத்துக்கு ஏற்பாடு செய்த பெண், எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.