முருகனை புழல் ஜெயிலுக்கு மாற்ற வேண்டும்- வேலூர் சூப்பிரண்டிடம் சகோதரி கோரிக்கை மனு

280 0

வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகனை புழல் ஜெயிலுக்கு மாற்ற கோரி ஜெயில் சூப்பிரண்டிடம் அவரது சகோதரி கோரிக்கை மனு அளித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி கணவன்-மனைவியும் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகன் ஜெயிலில் தன்னை அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், அதனால் புழல் ஜெயிலுக்கு மாற்றக்கோரி ஜீவசமாதி அடைய வேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். 20 நாட்களுக்கு மேலாக நீடித்த இந்த போராட்டம் ஜெயில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் முருகனின் சகோதரி தேன்மொழி வேலூர் ஜெயில் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் முருகனை புழல் ஜெயிலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த மனுவை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.