பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது? தவிசாளர் நிரோஷ் கேள்வி

261 0

பட்டதாரி பயிலுனர் பயிற்சி செயற்றிட்டத்தில் இராணுவத்திற்கு தேவையற்ற தலையீட்டைக்கொள்கின்றமையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேள்விக்கு உட்படுத்துவதாக அதன்; தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்று அரச தாபனங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டவர்களின் பயிற்சி விடயத்தில் இராணுவத்தினர் பயிலுனர் வரவு விபரம் கோரல், குழு படம் பிடித்தல் மேற்கொண்டுள்ளனர். எமது பிரதேச சபைக்கு பயிற்சிக்கு வந்தவர்கள் விடயத்தில் பயிற்சியின் முதல் நாளில் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அறிந்து எதிர்வரும் நாட்களில் அவ்வாறு படையினருக்கு அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறாயின் உத்தியோகபூர்வ கோரிக்கை பரீசீலனைக்குத் தேவை எனவும் தவிசாளராக நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளேன்.

இதேவேளை பட்டதாரி பயிலுனர்களை இணைப்புச் செய்யும் கோரிக்கையினை எமது பிரதேச சபைக்கு அனுப்பி வைத்த மாவட்ட செயலகத்திடம் மேற்படி விடயத்தில் இராணுவத்திற்கு இருக்கின்ற சம்பந்தம் பற்றியும் அவை நிர்வாக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைமுறைக்கு உட்பட்டதா என விளக்கம் கேட்டும் கடிதம் ஒன்றை பக்ஸ் வாயிலாக இன்றைய தினமே (15.09.2020) அனுப்பி வைத்துள்ளோம்.

பட்டதாரிகளை நிர்வாக ரீதியில் பயிற்றுவிக்கவேண்டிய பொறுப்பு அரச பயிற்சிகளை வழங்கவேண்டியது பொதுநிர்வாகத்துறையைச் சார்ந்தது. தலைமைத்துவ பயிற்சி விடயத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்தால் அதுபற்றி உரிய அறிவிப்புக்கள் நடைமுறைகள் மூலமாகவே இராணுவத்தினர் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதை விடுத்து பயிலுனர்கள் எங்கெல்லாம் செல்கின்றார்களே அவர்களைப் பின்தொடர்பவர்களாக இராணுவத்தினர் சென்று அவதானத்தினைச் செலுத்துவது இராணுவத்தினர் பொது நிர்வாகத்தினை நடத்தும் அரச கொள்கை மாற்றப்பட்டு விட்டதா எனக் கேள்வி எமக்கு எழுகின்றது.

அதேவேளை எமது அரச நிர்வாகக் கட்டமைப்பு ரீதியிலான விடயங்களுக்குள்ளும் இராணுவத் தலையீட்டை ஏற்றுக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையை கண்டிக்கின்றோம். சகல திணைக்களங்களுக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. சிலவேளை ஏனைய திணைக்களங்கள் நியமன ரீதியான அதிகாரிகளைக் கொண்ட கட்டமைப்பு ஆதலால் எதிர்க்க முடியாத சூழல் காணப்படும்.; இந்நிலையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைத்துவத்தினை உள்ளுராட்சி மன்றங்களே கொண்டுள்ள நிலையில் எமது ஏனைய மாநகர, நகர, பிரதேச சபைகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அரச நிர்வாகத்தினை சட்டரீதியிலும் சட்டரீதியற்ற சம்பிரதாயங்கள், உலக ஒழுங்குகளின் அடிப்படையிலும் இராணுவமயப்படுத்துவதில் இருந்து காப்பாற்றும் பொறுப்பு சகலருக்கும் உரியது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைச் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.