அங்கீகரிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி

328 0

பரிசோதனை நிலையில் உள்ள அங்கீகரிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி வழங்கியுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிகட்ட பணியில் உள்ளதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, சீனா நாட்டின் தடுப்பூசிகள் உள்ளிட்ட பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.
கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கிவிட்டதாக கூறும் ரஷிய உலகின் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை பதிவும் செய்துள்ளது.
புட்னிக் வி என பெயரிடப்பட்டுள்ள ரஷியாவின் அந்த தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், சீனா தனது நாட்டு மக்களுக்கு இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ள உறுதிப்படுத்தப்படாத கொரோனா தடுப்பூசியை மிகப்பெரிய அளவில் செலுத்தி வருகிறது.
அங்கீகரிக்கப்படாத இந்த தடுப்பூசி பக்கவிழைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி அவசரகால பயன்பாட்டை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை சீனா தனது மக்களுக்கு செலுத்தி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகமும் பரிசோதனை நிலையில் உள்ள ஒரு கொரோனா தடுப்பூசியை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு செலுத்த அவசரகால அனுமதி வழங்கியுள்ளது.
சீனோபார்ம் என்ற சீன மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 கட்ட மனிதபரிசோதனைகளை முடித்துள்ளது. இந்த இரண்டு கட்ட பரிசோதனையிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களிலில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தெரியவந்தது. ஆனால் இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சிறுசிறு பக்கவிளைவுகள் ஏற்பட்டது.
இதையடுத்து, இறுதிகட்டமான 3-ம் கட்ட தடுப்பூசி பரிசோதனை தற்போது நடைபெற தொடங்கியுள்ளது. ஆனாலும், இந்த தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துவதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் உலக சுகாதார அமைப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பரிசோதனை நிலையில் உள்ள சீனோபார்ம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசாரகால பயன்பாட்டிற்காக கொண்டுவர அமீரக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் பரிசோதனை நிலையில் உள்ள ஒரு நிரூபிக்கப்படாத
கொரோனா தடுப்பூசியை தங்கள் நாட்டை சேர்ந்த மக்களுக்கு மிகப்பெரிய அளவில் செலுத்த அமீரகம் திட்டமிட்டுள்ளது.
இந்த அவசரகால பயன்பாட்டின்போது மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.