துபாய் சிலிகன் ஓயசிஸ் பகுதியில் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய பாதுகாப்பு ஊழியர்கள் ‘ஸ்மார்ட் ஹெல்மெட்’டை பயன்படுத்தி வருகின்றனர்.துபாய் சிலிகன் ஓயசிஸ் ஆணையம் பொது இடங்களில் உலா வரும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய ‘கேசி என்901’ என்ற நவீன தெர்மல் ‘ஸ்கேனிங் ஹெல்மெட்’டை பாதுகாப்பு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது. இந்த ஹெல்மெட்டின் உதவியால் துபாய் சிலிகன் ஓயசிஸ் பகுதியில் நடமாடும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதனின் சாதாரண உடல் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் ஆகும். இதில் 37.5 டிகிரி செல்சியஸ் வரை சாதாரண வெப்பநிலையாக கருதப்படும். உடல் வெப்பநிலை 38 அல்லது அதற்கு மேல் அதிகரித்தால் அது காய்ச்சலாக கருதப்படும். அந்த ஹெல்மெட்டின் திரையில் மனித உடல் வெப்பநிலை ‘இன்பெரா ரெட்’ எனப்படும் அகச்சிவப்பு கதிர்கள் உதவியுடன் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு உடல் வெப்பநிலை அதிகமாக காணப்படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு ஊழியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
இதற்காக தனியாக வெப்பநிலை பரிசோதனைக் கருவிகள் எதுவும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. இதன் மூலம் பொதுமக்கள் வேகமாக வந்து செல்ல உதவியாக இருக்கும். கால தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நவீன முறையிலான ஹெல்மெட் பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து துபாய் சிலிகன் ஓயசிஸ் ஆணையத்தின் துணைத் தலைவர் முஅம்மர் அல் கதீரி கூறும்போது, “கொரோனா பாதிப்பு காலத்தில் வர்த்தக செயல்பாடுகளை மேம்படுத்த இந்த ‘ஸ்மார்ட் ஹெல்மெட்’கள் உதவியாக இருக்கிறது. இது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் வரும் பார்வையாளர்களுக்கும் சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது. இந்த கேசி என்901 என்ற சிறப்பு ஹெல்மெட், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் தொலைவில் இருந்தாலும் துல்லியமாக மனிதரின் உடல் வெப்பநிலை தெரிந்து கொள்ள உதவுகிறது. இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் உதவியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.