பக்தர்கள் கிரிவலம்: ‘வாட்ஸ்அப்’ஆல் பரபரப்பு

303 0

201611281730375456_thiruvannamalai-kubera-bhagavan-devotees-girivalam_secvpfகுபேர பகவான், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்றும் வாட்ஸ் – அப் மூலம் தகவல் பரவியதால் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.

கார்த்திகை மாதம் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை குபேர லிங்கத்திற்கு குபேரபட்டிணத்தில் இருந்து குபேரர் வந்து சூட்சமாக (மறைமுகமாக) பூஜை செய்வார் என்பதும், அதன் பின்னர் குபேரர் கிரிவலம் செல்வார் என்பதும், குபேரர் பூஜை செய்வதை கண்டால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம்.

இதையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்திற்கு நேற்று காலை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. பின்னர் மாலை 5 மணியளவில் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. குபேரர் பூஜை செய்வதை காண்பதற்காக திரளான பக்தர்கள் குவிந்தனர்.

பின்னர் மாலை 6 மணி முதல் 7 மணி வரை குபேர லிங்கத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். குபேர லிங்கத்தில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்களால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் குபேர பகவான், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்றும் வாட்ஸ் – அப் மூலம் தகவல் பரவியது. இதையறிந்த பக்தர்கள் ஏராளமானோர் நேற்று கிரிவலம் செனறனர்.

குபேர கிரிவலத்தையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள வீடுகளில் முன்பாக பெண்கள் அரிசி மாவால் கோலம் போட்டு, வெற்றிலை வைத்து நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கமான நாட்களை விட அதிகமாக காணப்படும். ஆனால் 26,27 திகதிளில் வழக்கமான விடுமுறை நாட்களை விட அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். வெளி மாநிலம், பிற மாவட்டத்தை சேர்ந்த பலர் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வந்திருந்தனர். ஆந்திராவில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவிலை சுற்றி வந்து கோபுரங்கள், கட்டுமானங்களை பார்வையிட்டு, பின்னர் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தை சேர்ந்த பிற மாவட்ட மக்களும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதன் காரணமாக வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு வருபவர்களை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவு அலைமோதியது.

பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.