வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி: பராமரிப்புப் பணி மும்முரம்

352 0

வைகை அணை மற்றும் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

வைகை அணை தேனி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச்சில் மூடப்பட்டது. இதனால் பரபரப்பாக காணப்படும் வைகை அணை பூங்கா கடந்த 6 மாதங்களாக ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் கடந்த 5 மாதங்களில் ரூ.20 லட்சம் வரை நுழைவுக் கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. எனவே வைகை அணையில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு வாரங்களில் வைகை அணையில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க அரசு உத்தரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அணையில் உள்ள பூங்காக்களில் செடிகளை பராமரிக்கும் பணி நடைபெறுகிறது. செடிகளில் கவாத்து செய்து, களைச்செடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மிக விரைவில் வைகை அணைப் பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழக அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றனர்.