சுமந்திரன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும்

373 0

“கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் தொடர்ந்தும் தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தியதுடன் தன்னிச்சையாக செயல்பட்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பை பாரிய பின்னடைவுக்கு எடுத்துச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சித் கொழும்புக் கிளைத் தலைவரும், அரசியல் உயர்மட்டக் குழு உறுப்பினருமான கே.வி.தவராஜா, “சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். இது தொடர்பில் தலைமைத்துவம் உடனடியாக செயல்படாவிடின் ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை விட மிக மோசமான நிலைமை தமிழரசுக் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்டு தமிழும் தேசியமும் அழிக்கப்பட்டுவிடும்” எனவும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்” என்ற தலைப்பில் அவர் அனுப்பிவைத்திருக்கும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு;

“நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து செயல்படுவது தமிழ் தேசியத்தின் மீது நான் கொண்ட பற்றினால் மட்டுமே. கடந்த பத்து ஆண்டுகளாக கட்சியில் பல பதவிகள் எனக்கு வழங்கப்பட்டன. எந்தப் பதவிக்காகவோ அல்லது கொழும்பு மாவட்டத்தில்; போட்டியிட வேண்டுமென்றோ அல்லது தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்றோ இன்றுவரை கட்சித் தலைமைத்துவத்திடம் எந்த வேண்டுகோள்களையும் நான் முன்வைத்தவனல்ல. வைக்கப்போகின்றவனுமல்ல என்பது மட்டுமன்றி 10 வருடங்களாக தலைமையகத்தின் வேண்டுகோளுக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைய கொழும்புக் கிளையை சொந்த நிதியிலேயே நடாத்தி வருகின்றேன். கட்சியிலிருந்து எந்த சூழ்நிலையிலும் ஒரு சதமேனும் நிதி உதவி பெற்றவனல்ல. ஆனாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இருப்பை பாதிக்கும். செயல்பாடுகளை கூறவேண்டிய தார்மீக கடமையும் கடப்பாடும் எனக்குண்டு என்பதனாலேயே இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்தமைக்கு முக்கிய காரணகர்த்தாவாக செயல்பட்டவர் ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன். கட்சியின் கட்டுக்கோப்பையும் மீறி பொறுப்பற்ற முறையில் தான்தோன்றித் தனமாக தன்னிச்சையாக எடுத்த முடிவுகளினாலும் செயற்பாடுகளினாலும் தமிழ்தேசிய உணர்வாளர்களின் மனதைப் புண்படுத்தி பல்லாயிரக் கணக்கான வாக்குகளை விசேடமாக தமிழரசுக்கட்சி இழந்தமைக்கு ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் முக்கிய காரணகர்தா ஆவார். ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும். இவர் கட்சியிலிருந்து நீக்கப்படாவிடின் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்ட தமிழரின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் அர்த்தமிழந்து போவதோடு தாயகத் தேசிய கொள்கைகளும் தமிழரசுக்கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெறுமதியிழந்து அழிந்தே போகும் நிலை நிச்சயம் உருவாகும் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். கட்சியைப் தொடர்ந்து பின்னடைவுக்கு இட்டுச் சென்று வீழ்ச்சிப் பாதையில் நகர்த்திச் சென்று கொண்டிருக்கும் சுமந்திரன் அவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்காதுவிட்டால் அது பாரிய வரலாற்றுத் தவறாக அமையும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு பல காரணங்களான
(1) 2015ம் ஆண்டின் நல்லாட்சியில் அரசமைப்பு விவகாரம்
(2) தமிழ் தேசிய கொள்கை நீக்கல் அரசியல்.
(3) ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்கள்
(4) தமிழ் ஊடகங்கள் மீது அவதூரான கருத்துக்கள்
(5) இனப்படுகொலை- சர்வதேச விசாரணை முடிந்து விட்டது
(6) ஜெனிவா விவகாரங்களை கையான்ட முறை
(7) தேசிய அரசியலுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை தமிழ் தேசிய அரசியலுக்கு வழங்காமை (கடும் அரசஆதரவு)
(8) அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
(1-8) ஒன்றிலிருந்து எட்டுவரை குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் சுமந்திரனின் செயல் பாட்டை விபரமாக இங்கே குறிப்பிடுவதை கட்சியின் எதிர்கால நலன்காரணமாக தவிர்த்துள்ளேன்

மேலே குறிப்பிடப்பட்ட 8 விடயங்கள் ;உட்பட கீழே விபரமாக பதியப்பட்டுள்ள 12 விடயங்களுமான் சாட்சியங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளின்றி தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்கப்படலாம்.

(1) வேட்பாளர்கள் தெரிவில்

(அ) வேட்பாளர் தெரிவில் நியமனக்குளு உறுப்பினர் என்ற வகையில் தமிழரக்கட்சியின் வாலிபர் முன்னணி. மகளிர் முன்னணிக்கு முன்னுரிமை முக்கியத்துவம் வழங்கி வேட்பாளர்களை தெரிவு செய்யம்படி எனது வேண்டுகோளை முன்வைத்த போதிலும் நீண்ட காலமாக கட்சிச் செயல்பாடுகளில் அர்ப்பணிப்போடு செயல்பட்ட வாலிபர் முன்னணி. மகளிர் முன்னணியை புறந்தள்ளி சுமந்திரன் கட்சி நலனைப் பாராது தனது தெரிவாக விலாசமற்ற தமிழ் மக்களுக்கு யாரென்றே தெரியாத கட்சியின் உறுப்பினரல்லாத புது முகங்களான அம்பிகா சற்குணநாதன், நளினி ரட்ணராஜா ஆகிய இருவரது தெரிவிலும் யாப்பு விதிகளுக்கு மாறாக தன்னலம் கருதி கூடுதல் அக்கறை செலுத்தினார். நளினி ரட்ணராஜாவை ஆப்பிரகாம் சுமந்திரன் வேட்பாளராக தெரிவு செய்வதற்கு எடுத்த கடும் முயற்சி கட்சியின் மற்றைய வேட்பாளர்களினதும் அங்கத்தவர்களினதும் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

அம்பிகா சற்குணநாதன்,வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரங்களும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய திகதி குறிப்பிப்பட்ட நாளில் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியவரை சுமந்திரன் இறுதி நாளன்று தேசிய பட்டியலில் உள்வாங்கினார்

(ஆ) மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மங்களேஸ்வரி சங்கர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், கருத்துகள் நியமனக் குழுவில் முன்வைக்கப்பட்ட பொழுது இந்த விண்ணப்பதாரி சகல தகுதிகளையும் கொண்டவர் என்பதோடு வாக்காளப் பெருமக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றிபெறக் கூடிய வேட்பாளராகையால் அவருக்கு நியமனம் வழங்கும்படி நான் நியமனக் குழுக்கூட்டத்தில் தெரிவித்த போதிலும். சுமந்திரன் மங்களேஸ்வரி சங்கருக்கு நியமனம் வழங்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். கட்சி நலன் பாராமல் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகச் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கருக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படுவது சுமந்திரனின் தலையீட்டினால் நிராகரிக்கப்பட்டது. மங்களேஸ்வரி சங்கருக்கு வாய்ப்பு அளிதிருந்தால் ஒரு பெண் பிரதிநிதித்துவம்; கிடைத்திருக்கும் என்பதுடன் மட்டக்கிளப்பிலிருந்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள்.

(இ) தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மங்களேஸ்வரி சங்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர் மங்களேஸ்வரி சங்கர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு 15,000 மேற்பட்ட விருப்பு வாக்கு;களைப் பெற்றுள்ளார். தனக்கு நெருக்கமானவர் என்பதற்காக எந்தப் பொது மகனும் அறியாத தெரியாத நளினி ரட்ணராஜாவுக்கு நியமனம் வழங்குவதற்காக மக்கள் அபிமானம் பெற்ற மங்களேஸ்வரி சங்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இச் செயல்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கணிசமான வாக்குச் சரிவை ஏற்படுத்தியதோடு ஒரு பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்தது.

(2) ஊடகப் பேச்சாளர் பதவி துஸ்பிரயோகம்
(தமிழ் தேசிய கொள்கையை கொச்சப்படுத்தியமையும்)

(அ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவி என்பது பொறுப்புள்ள ஒரு பதவி நிலையாகும். அப்பொறுப்பைச் சுமந்துள்ள ஆ.சுமந்திரன். மிகவும் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்து விலகி சுயநலம் கருதி தன்னிச்சையாக செயற்பட்ட பல சந்தர்ப்பங்கள் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்துள்ளன.

தேசிய கொடியும் தேசிய கீதமும்

(ஆ) தேசிய கொடியையும் ;தேசிய கீதத்தையும் தானும் தமிழ்; தேசிய கூட்டமைப்பின் தலைவர் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக நேர்கானலில் கூறியமை கட்சியின் ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களை வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளமையையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும் இச் செயல்பாடு தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிர்பாhப்புக்களுக்கு நேர்மாறாக ஆ.சுமந்திரன் செயல் படுகின்றார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. தன்னையும் தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவரையும் தவிர மற்றையவர்கiளை; இனவாதிகளாக காட்ட முற்பட்டுள்டுள்ளமை தெட்டத்தெளிவாக புலப்படுகின்றது.

(இ) சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் காணொளியில் செவ்வியில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். ஆயினும் தான் சிங்கள மொழியில் வெளிப்படுத்திய கருத்துகள் தமிழில் திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதே கருத்தை கட்சித் தலைமைக்கும் அறிவித்தார். ஆயினும் சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டபோது எவ்விதமான திரிபுகளுக்கோ அல்லது மிகைப்படுத்தலுக்கோ உட்பட்டிருக்கவில்லை. சிங்களத்தில் எது தெரிவிக்கப்பட்டதோ அதுவே தமிழுக்கும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஆனால் தனது தவறை ஏற்றுக்கொள்ளாமல் தனது கருத்துகளை நியாயப்படுத்தியமையும் அவை தனது தனிப்பட்ட கருத்துகளே என்று வெளிப்படையாக கூறவில்லை என்பதால் தீவிர தமிழ் தேசிய உணர்வாளர்கள் இதனைக் கட்சியின் பேச்சாளர் என்ற முறையில் சுமந்திரன் தெரிவித்த கருத்து கட்சியின் கருத்தாகவே கருதி வாக்குப்பதிவிலிருந்து விலகியமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மக்களின் கூடுதல் அபிப்பிராயம் பெற்ற தனித்துவக்கட்சி மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் வெளியிட்ட கருத்துகளால் மக்களின் மனதில்ஆறாத காயத்தையும் வேதனையையும் உருவாக்கியது இச் செயல்பாட்டினால் மக்கள் கொண்ட சினம் தேர்தலிலும் பிரதிபலித்ததை நாம் அனைவரும் கண்டோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகளே தவிர அது தமிழ் தேசிய கூட்டமைப்ப்பின் ஊடகப் பேச்சாளராக வழங்கப்படவில்லை, அத்தோடு அக்கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடுமல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்த போதும் சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியை தனது தனிப்பட்ட கருத்து என பொதுவெளியில் கூறவில்லை. இச் செயல் பாட்டினால் தமிழ் தேசியத்தில் தீராத பற்றுக்கொண்ட வாக்காளர்களின் கணிசமான வாக்குகள் வீழ்ச்சியடைந்ததுடன் கட்சியின் வாக்குவங்கியை பெரிதும் பாதித்தது;

(3) அமைச்சுப் பதவி

(அ) தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆப்பிரகாம் சுமந்திரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கையில் அமைச்சுப் பதவி தொடர்பில் கூறிய கருத்துக்கள் தமிழ் தேசியத்திற்காக பல இழப்புக்களை சந்தித்து உரிமை போராட்டத்தை நோக்கி தொடர்ந்து நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு விட்டதா என்ற வாத பிரதி வாதங்களை தமிழ் வாக்காள பெருமக்களிடையே ஏற்படுத்தியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாட்டினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குவங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டது.

(ஆ) ஆப்பிரகாம் சுமந்திரனுடைய இக்கருத்துக்கள் வடக்கிலும் கிழக்கிலும் அவரது நடவடிக்கைகள் பாரியளவில் தாக்கம் செழுத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பேரம் பேசி அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்று தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செய்வதை விட நேரடியாக அரசாங்கக் கட்சி சார்பில் அல்லது அரசாங்கத்தின் நேரடி ஆதரவுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதனூடாக இத்தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்தார்கள். அதன் பிரதிபலிப்பை தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாக பிரதிபலித்தன கட்சியின் அடிப்படையைப் கொள்கையை கேள்விக்குட்படுத்திய சுமந்திரன் அதிக விருப்பு வாக்குக்களைதான் பெறும் நோக்கத்தில் கூறிய இக் கருத்து கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தேசிய கட்சிகளுக்கு கணிசமான வாக்குக்கள் பெற காரணமாக அமைந்தது.

(இ)சுமந்திரனின் சொந்த தொகுதியான உடுப்பிட்டித் தொகுதியில் (வல்வெட்டித்துறை) 6600 மேற்பட்ட விருப்பு வாக்குக்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் பெற்றதுடன் யாழ் மாவட்டத்தில் 49.373 வாக்குக்களை இலங்கை சுதந்திரக் கட்சி பெற்றுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 45.797 வாக்குக்களை பெற்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

(4) தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தல்

(அ) தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை.சேனாதிராசா அவர்களது நற் பெயருக்கு களங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் சுன்னாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் திட்டமிட்டு பலர் முன்னிலையில் ஊடகவியலாளர் வித்தியாதரனை முன்நிறுத்தி தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை.சேனாதிராசா பொது வெளியில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டபோது சுமந்திரன் மௌனம் சாதித்தமையான இந்த திட்டமிட்டசெயலினால் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை.சேனாதிராசாவின் வாக்குவங்கி தகர்க்கப்பட்டு வெற்றிபெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

(ஆ) இந்தச் செயல்பாட்டிற்கு உடனடியாக கட்சித் தலைமையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் திட்டமிட்ட செயல்பாடு தனிப்பட்ட மாவை சேனாதிராஜா குறிவைத்து நடாத்தப்பட்டதல்ல தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே குறி வைத்து நடத்தப்பட்டமை கட்சிக்கு எதிரான நடவடிக்கையாகும்.

(5) கட்சித் தலைமை மீது மிகமோசமான விமர்சனம்

(அ) தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறு தினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஊடகப் பேச்சாளர் பதவியை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் தன்னிச்சையான அடிப்படையில் ஊடகச் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைமையையும் சக வேட்பாளர்களையும் மிக மோசமான வகையில் விமர்சித்து தமிழரசுக் கட்சியின் வாக்குச்சரிவிற்கான காரணங்களை தலைமைத்துவம் மீது சுமத்தினார்.

(ஆ) இச் செயல்பாடானது கட்சியின் கட்டுப்பாட்டினை மீறியதாகும். கூட்டுப்பொறுப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயற்பாடுகள் தனது இருப்பைத் தக்கவைக்கவும் தன்னை நியாயப்படுத்தவும் ஊடகப்பேச்சாளர் என்ற பதவியை தான்தோற்றித் தனமாகப் பயன்படுத்திய மிகவும் மோசமான உதாரணமாகும்.

(6) காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள்

(அ) 2008ம் ஆண்டு கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் சார்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அந்த விசாரணையில் சாட்சியங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டதையடுத்து 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சட்டமா அதிபரினால் மூன்று நீதிபதிகள் அடங்கிய கொழும்பு விசேட நீதிமன்றில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட உட்பட 14 கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது

(ஆ) முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட மேல் நீதிமன்றில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை இடைநிறுத்த தனது சட்டத்தரணியுடாக உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார் அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றில் கடற்படையினருக்கு எதிராக நடைபெறும் விசாரணையை இடைநிறுத்த உத்தரவிட்டதையடுத்து மேல் நீதிமன்றில் கடற்படையினருக்கு எதிராக நடாத்தப்பட்ட விசாரணைனகள் இடைநிறுத்தப்பட்டன.

(இ)சுமந்திரனது கனிஸ்ட சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியில் சட்டத்துறை உறுப்பினருமான நிரான் அங்கட்டல் உயர் நீதிமன்றில் வசந்த கரன்னாகொட சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கனிஸ்ட சட்டத்தரணியாக ஆஜரானார்.

(ஈ) காணாமல் போன குடும்ப உறவுகளுக்கு நீதி பெற்றுக் கொடுக்க 10 வருடங்களுக்க மேல் நீதிமன்றங்களில் வாதாடிய நிலையில் நியாயம் கிடைப்பதைஉயர் நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவைப் பெற்று நிறுத்தி வைத்தது ஆப்பிரகாம் சுமந்திரனினால் கட்சியின் சட்டத் துறை அங்கத்தவராக சட்டக் குழுவில் உள்வாங்கப்பட்ட சட்டத்தரணி நிரான் அங்கட்டல், இவரையே திரு.ஆ.சுமந்திரன் ஜெனிவாவிற்கும் அழைத்துச்சென்றார்.

(7) போராளிகளை கட்சியில் இணைத்தல்;

(அ); பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் முன்னாள் போராளிகளை தமிழ் அரசுக் கட்சியில் இணைப்பது தொடர்பாக கொழும்புக் கிளையின் செயளாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கொழும்புக் கிளைக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தாகவும் ; அந்தத் தீர்மானத்தை வவுனியாவில் நடாத்தப்பட்ட மத்தியகுழு கூட்டத்தில் தான் முன்வைத்த பொழுது தான் மட்டுமே முன்னாள் போராளிகளை கட்சியில் இணைக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக ஊடக சந்திப்பை நடாத்தினார்.

(ஆ) கொழும்புக் கிளையின் செயளாளளராக கடமையாற்றிய நடேசபிள்ளை வித்தியாதரன முன்னாள் போராளிகளை தமிழ் அரசுக் கட்சியில் இணைப்பது தொடர்பான ஒரு தீர்மானத்தை கொழும்புக் கிளையில் கொழும்புக் கிளையின் செயலாளராக செயல்பட்ட காலகட்டத்தில் முன்வைக்கவில்லை;.2014ம் ஆண்டு கொழும்புக் கிளையின் செயலாளர் பதவியிலிருந்து விலகி 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டமை அனைவரும் அறிந்ததே இந் நிலையில் ஊடகப் பேச்சாளர்; ஆ.சுமந்திரன் 2020 தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் கொழும்புக் கிளையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ;அவ்விடயத்தை வவுனியாவில் நடை பெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் தான் முன் வைத்ததுடன் (திரு சுமந்திரன்) தான் மட்டுமே போராளிகளை கட்சியில் ;இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தாக ஊடகஅறிக்கையில் குறிப்பிட்டபொழுது கொழும்புக்கிளை நிர்வாகக்குளு அங்கத்தவர்கள் இந்த உண்மைக்குப் புறம்பான அறிக்கையை மறுதளித்து அறிக்கை விடும்படி என்னை வேண்டிக் கொண்டதற்கு அமைய நான் மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு உண்மையை வெளிக்கொண்டு வந்தேன்.

(9) முன்னாள் போராளிகள் தடுப்புக்காவலில்

(அ) முன்னாள் போராளிகளை இணைப்பது சம்பந்தமாக தீர்மானத்தை கொண்டு வந்த போது தான் மட்டமே தீர்மானத்திற்கு ஆதரவா செயல்பட்டதாக கூறும் ஆயுதப்போராட்டத்தையும் விரும்பாத ஆப்பிரகாம் சுமந்திரன் முன்னாள் போராளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கில் முதலாவது அரசதரப்பு சாட்சி ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன்.

(ஆ) சுமந்திரனுக்கு 16 அதிரடிப்படையினரும் 4 பொலிசாருமாக 20 பேர் பாதுகாப்பு வழங்குகின்றனர். சுமந்திரன் தனக்கு யாரால் அச்சுறுத்தல் என்று வெளிப்படையாக இன்றுவரை பொது வெளியில் கூறவில்லை. ஆனால் அப்பாவி 20 தமிழ் இளைஞர்கள் சிறையிலும் தடுப்புக் காவலிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருபது குடும்பங்களின் ஜீவனோபாயம் முழுமையாக குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. இச் செயல்பாட்டினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேர்தலில் பெரும் சரிவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

20 தமிழ் இளைஞர்கள் சிறையிலும் தடுப்புக்காவலிலும் உள்ளனர்.

(10) இறுதியுத்தம் ஒரு வாகன விபத்து

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஆடி மாதம் ஜ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு திரு. ஆ.சுமந்திரன் வழங்கிய செவ்வியில், இறுதி யுத்தத்தில் குண்டுவீச்சில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதை சாதாரண வாகண விபத்தோடு சுமந்திரன் ஒப்பிட்டு செவ்வி வழங்கியது அவரது மனநிலையை நன்கு கோடிட்டுக் காட்டுகின்றது. இச்செயல்பாடு தமிழ் மக்களிடையே பெரும் வேதனையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தி தமிழ் தேசிய வாக்குவங்கியை தகர்த்தது .

(11) கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதை திட்டமிட்டு தவிர்த்த சுமந்திரன்

(அ) கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் அதிக அக்கறை செலுத்திய நிலையில் கொழும்புக் கிளையைக் கூட்டி பல கட்டங்களாகக் கலந்தாலோசனை செய்யப்பட்ட பொழுது கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவேண்டுமென்ற கருத்து கொழும்பு கிளையின் நிர்வாகிகள் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்பட்டபோதிலும், சுமந்திரன், மனோ கணேசனுக்கு ஆதரவு நிலையையே வெளிப்படுத்தியதுடன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் இல்லத்தில் மனோ கணேசனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் என்ற முறையில் நான் கலந்து கொள்ள வேண்டுமெனக் கூறிய போதிலும் பேச்சுவார்த்தையில் நான் கலந்து கொள்வதை சுமந்திரன் சுயநல நோக்கில் தவிர்த்து தலைமைத்துவத்தை திசைதிருப்பி கொழும்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுவதில்லை என்ற தீர்மானத்தை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்.

ஒரு ஆசனத்தை இழந்தோம்

(ஆ) கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றிருக்கலாம் அவ்வாறு வெற்றி பெறமுடியாத நிலையில் நிச்சயமாக தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெற்றிருக்கலாம். நான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடக் கூடாது என்பது மட்டமின்றி தனது தெரிவான அம்பிகா சற்குணநாதனை தேசிய பட்டியலில் உள்வாங்கி தேசிய பட்டியலில் நியமனம் வழங்கி விடவேண்டுமென்ற நோக்கத்தில் சுமந்திரன் 18.03.2020ல் தலைமைத்துவத்தினால் தீர்மானிக்கப்பட்ட தேசிய பட்டியலில் முதலாவது இடத்திலிருந்த எனது பெயரை பின்தள்ளியது மட்டுமின்றி வழமைக்கு மாறாக 19.03.2020ல் ஊடக சந்திப்பை நடாத்தி அம்பிகா சற்குணநாதனின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக பகிரங்கமாக பொது வெளியில் அறிவித்தார். (தேசிய பட்டியலில் எனது பெயரை உள்வாங்கும்படி நான் தலைமையகத்திடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை)

கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளை போட்டியிட்டு நான் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்படுவதையோ அல்லது தேசிய பட்டியல் மூலம் தெரிவாகின்றமையை சுமந்திரன் திட்டமிட்ட செயல்பாட்டின் மூலம் தடுத்துள்ளார்.

(12) தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவா?

(அ) கொழும்பு மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் தேசிய கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டனர். அதனால் தேர்தல்களில் எந்தத் தேசியக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லையென்பது தமிழ் தேசிய கட்சியான தமிழரசுக் கட்சியின் கொள்கை ரீதீயான நிலைப்பாடாகும். ‘தேசிய கட்சிகளையோ அல்லது தேசிய கட்சியுடன் இணைந்து செயல்படும் எந்த தமிழ் வேட்பாளர்களையும் வெளிப்படையாக ஆதரிப்பதில்லை’ என்ற கொள்கை ரீதியான முடிவே கட்சியின் முடிவாகயிருந்தது 2015ம் ஆண்டுத் தேர்தலிலும் கொள்கை ரீதியான முடிவு பின்பற்றப்பட்டது ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான சுமந்திரன் தேர்தல் பரப்புரை இறுதிநாளில் வடக்குக் கிழக்கை தாயகமாகக் கொண்ட கொழும்பு மாவட்ட தமிழ் வாக்காளர்களை சஜித் பிரேமதாசாவைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மனோ கனேசனுக்கு வாக்களிக்கும்படி தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைமைத்துவத்துடனோ அல்லது 10 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சி கொழும்புக் கிளையிடமோ கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு முரண்படும் முடிவை சுயநலநோக்கில் தன்னிச்சையாக எடுத்து தமிழ் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக வேண்டுகோளை முன்வைத்தார்

(ஆ) ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மனோ கனேசனுக்கு வாக்களிக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான திரு ஆப்பிரகாம் சுமந்திரன் ஒரு வேண்டுகோளை முன்வைத்தமை யாழ்,கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்குக் கிடைக்க வேண்டிய 13,564 தமிழ் வாக்குக்களை ஐக்கிய மக்கள் சக்தி பெறுவதற்கான ஊன்றுகோளாக அமைந்தது. ஊடகப் பேச்சாளர் சுமந்திரனின் இச்செயல்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கிச் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாகும்;

அரசியல் ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிலைநிறுத்தும் பல்வேறு முக்கிய தீர்க்கமான தருணங்களில் எட்டப்பட்ட பொருத்தமற்ற முடிவுகள் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான திரு ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் தொடர்ந்தும் தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தியதுடன் தன்னிச்சையாக செயல்பட்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பை பாரிய பின்னடைவுக்கு எடுத்துச் சென்றுள்ளது

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். இது தொடர்பில் தலைமைத்துவம் உடனடியாக செயல்படாவிடின் ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை விட மிக மோசமான நிலைமை தமிழரசுக்கட்சிக்கு ஏற்படுத்தப்பட்டு தமிழும் தேசியமும் அழிக்கப்பட்டுவிடும்.”

இவ்வாறு கே.வி. தவராசா தெரிவித்திருக்கின்றார். கடிதத்தின் பிதிகள் இரா சம்பந்தன் (தலைவர்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு, மாவை; சேனாதிராஜா(தலைவர்), மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.