மட்டு ஆரையம்பதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தாலியை அறுத்து கொண்டு திருடன் தப்பியோட்டம்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 11 இலட்சம் பெறுமதியான தங்கத் தாலியை பறித்தெடுத்து கொண்டு திருடன் தப்பியோடிய சம்பவம் மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று சனிக்கிழமை 12 அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயண்சிறி தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள பாடசாலை ஆசிரியையான பெண் சம்பவதினமான சனிக்கிழமை 12 தனது வீட்டில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அதிகாலை 4 மணியளவில் படுக்கையறைக்குள் நுழைந்த திருடன் குறித்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த தாலியை பறித்த போது அப்பெண் சத்தமிட்டதையடுத்து அவரின் தாலியை இழுத்து அறுத்து கொண்டு தப்பி யோடியதுடன் வீட்டின் பிரதான கதவவை இழுத்து அதற்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சுமார் 11 பவுண் எடையுள்ள தாலியின் பெறுமதி 11 இலட்சத்திற்கும் அதிகமெனவும் இவ் திருட்டுத் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார மேற்கொண்டுவருகின்றனர்.