குமரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு மேலும் 2 பேர் பலி

230 0

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை வரை 70 பேர் சிகிச்சைக்காக கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 779 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,969 இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் 191 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஒருபுறம் இருக்க பலி எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து வருகிறது. வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர், சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதேபோல் கோட்டார் செட்டித் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவிற்கு பலியாகி உள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது.

களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 1,38,643 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்கள். கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி, பிளீச்சிங் பவுடர் தூவும் பணி நடந்து வருகிறது.