அபுதாபியில் 6 நாட்கள் தொடர்ந்து தங்கினால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதியில் வசிப்பவர்கள் அபுதாபி நகருக்குள் நுழைய பி.சி.ஆர். அல்லது டி.பி.ஐ. எனப்படும் சோதனை செய்த பின்னர் கொரோனா பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அபுதாபிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் அபுதாபி நகரில் 6 நாட்கள் தொடர்ந்து தங்கியிருந்தால் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.
6-வது நாளில் பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை எடுக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். எனினும் அபுதாபி பகுதியில் வசிப்பவர்கள் பிற அமீரகங்களுக்கு சென்று திரும்பும் போது இந்த விதிமுறை பொருந்தாது. கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது. மேலும் அவர்கள் அபுதாபி பகுதிக்குள் நுழைய அவசர சேவை வாகனங்கள் செல்லும் வழித்தடத்தை பயன்படுத்தி செல்லவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேற்கண்ட தகவலை அபுதாபி அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி தெரிவித்துள்ளது.