கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு உலக வங்கி நிதியுதவி

239 0

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு உலக வங்கி 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

சுகாதார செயற்பாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்ட 128.6 மில்லியனில் 56 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நேபாளம் மற்றும் இலங்கை மாலத்தீவுக்கான உலக வங்கியின் பிராந்திய இயக்குனர் ஃபரிஸ் எச். ஹதாத்-செர்வோஸ், கொரோனா தொற்றினை அடுத்து ஏற்பட்ட அவசரநிலைமை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்காக இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என கூறினார்.

உணவுப் பாதுகாப்பு, மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் என்பதை உறுதிசெய்வதற்கும் பொது சேவைகளை தொடர்ந்து வழங்க டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தவும் இருக்கும் திட்டங்களிலிருந்து நிதியுதவிகளை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில் உள்ளூர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 17 மில்லியன், பொது கல்வி நவீனமயமாக்கல் திட்டத்திற்கு 15 மில்லியன், இலங்கை ஆரம்ப சுகாதார அமைப்பு வலுப்படுத்தும் திட்டத்திற்கு 9 மில்லியன், பாசன விவசாய திட்டத்திற்கு 15 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய விவசாய குடும்பங்கள் விதைகளை வாங்குவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தொலைதூரக் கல்வி மூலம் வீட்டிலேயே கற்க உதவுவதற்கும், பாடசாலை மாணவர்கள் மின் கற்றல் மூலம், குறிப்பாக கிராமப்புற, சிறிய மற்றும் வளமற்ற பாடசாலைகளுக்கு உதவுவதற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதும் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பாடசாலை சூழலை உருவாக்க இது உதவும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பொதுப் போக்குவரத்தை கிருமி நீக்கம் செய்வதற்கும், கை சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடல் வெப்பநிலை திரையிடல் கருவிகளை வழங்குவதற்கும் இந்த நிதிகள் பயன்படுத்தப்படும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.