தீப்பிடித்த எம்.டி.நியூ டயமண்ட் கப்பல் தொடர்பாக ஆராய்வதற்காக அக்கப்பலின் கெப்டனை நாளை (திங்கட்கிழமை) சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் (MEPA) தெரிவித்துள்ளது.
குறித்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர், கப்பல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
மேலும், கப்பலுக்கு எந்தவிதமான சேதமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கப்பல் கரைக்கு கொண்டு வரப்படும் ஆபத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கப்பலில் தீ பரவியமைக்கான காரணங்கள் கண்டறியப்பட்ட பின்னர் ,கப்பல் தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதீப் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தீப்பிடித்த எம்.டி.நியூ டயமண்ட் கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 45 கடல் மைல் தொலைவில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இழுபறி படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடலில் கப்பல் பாதுகாப்பாக இழுக்கப்படுவதாக கடற்படை மேலும் கூறியுள்ளது.
இதற்கிடையில், எம்.டி.நியூ டயமண்ட் கப்பலின் கெப்டன் மற்றும் குழுவினரிடமிருந்து அறிக்கை பெற சி.ஐ.டி அதிகாரிகள் உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள் குழு, நேற்று காலிக்கு புறப்பட்டதாக அந்த துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீப்பிடித்த எம்.டி.நியூ டயமண்ட் கப்பல் குறித்து விசாரணை நடத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன சமீபத்தில் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.