மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் விசேட திறன் கொண்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாம் அக்கறை செலுத்துவோம் என்னும் தொனிப் பொருளிலான பேரணிநேற்று (11) வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்டது.
ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.றபீக் தலைமையில் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் அருகில் இருந்து ஆரம்பமான பேரணி ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் காரியாலயம் வரை சென்றடைந்தது.
குறித்த பேரணியில் கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.ஏ.சி.றமீஸா, சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மாற்றுத் திறனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்வி எமது சொத்தாகும், விசேட திறன்கொண்ட மாணவர்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பார்களானால் பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், வலது குறைந்த பிள்ளைகளை அன்புடன் பராமரிப்போம் அவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம், பெற்றோர்களே மாற்றுத்திறனாளி பிள்ளையின் கல்விக்கான உரிமையை வழங்குங்கள், கல்விக்கு ஊனம் ஒரு குறையில்லை என்னும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாம் அக்கறை செலுத்துவோம் என்னும் தொனிப் பொருளிலான துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பயணம் செய்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.