எமது உறவுகள் காடுகளில் தொலைந்து போகவில்லை – பற்றார்சன்

326 0

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, தமிழ் உணர்வாளரும், செயற்பாட்டாளருமான வில்லியம் பற்றார்சன் கனடா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் நாடாளுமன்றத்தை நோக்கி தமிழர்கள் நடத்தும் நீதி கோரும் நடை பவணியில் பங்கேற்று விடுத்த கோரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும்,

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை அறிவதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் நானும் நடந்து கொண்டிருக்கிறேன். மேலும், அவர்களின் உறவினர்கள் வீதியில் நின்று இலங்கை அரசிடம் பதில்களைக் கோரி 1280 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது உறவினர்களைக் காவலில் வைத்துள்ள இந்த இலங்கை அரசாங்கம், அவர்கள் இருக்கும் இடம், அவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் அல்லது அவர்களின் நிலை குறித்து இதுவரை அவர்களுக்கு அறிவிக்கவில்லை. இவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்க போவதாக இலங்கை ஜனாதிபதி கூறி இருக்கிறார். இது பல கேள்விகளை எழுப்புகிறது.

அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் உடல்கள் எங்கே? இது ஏன் நடந்தது? நினைவில் வைத்து கொள்ளுங்கள், இவர்கள் காடுகளில் தொலைந்து போனவர்கள் அல்ல. மாறாக இராணுவம் அல்லது பொலிஸ் வாகனங்களில் அல்லது காவல் நிலையங்களுக்குள் சென்றவர்கள். அவர்கள் அரசாங்க பராமரிப்பில் இருந்தவர்கள். ஆனால் அரசாங்கத்தால் ஏன் எந்த பதிலும் கொடுக்க முடியவில்லை?

இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோர நானும் இந்த மக்களுடன் இணைந்து நடக்கிறேன். அங்கு தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.