தமிழர்களை பற்றி கதைப்பதற்கு சிங்கள இனவாதியான சரத் வீரசேகரவுக்கு அருகதை இல்லை என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தமிழர்களின் அடையாளங்களையும் கலாசாரங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.
இதனைக் கண்டித்து தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர், இன்று (11)ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கோட்டாபாய அரசின் இராஜாங்க அமைச்சர்களில் ஒருவரான அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எதிராகவும்,தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு எதிராகவும்,தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும்,தீவிரமான இனவாத கருத்துக்களையும்,தமிழர்களை சிறுமைப்படுத்தும் கருத்துக்களையும், இறுதியாக தமிழர்களின் அடையாளங்களையும் கலாசாரங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.இவற்றை பற்றி கதைப்பதற்கு அவருக்கு எந்த வித அருகதையும் இல்லை.
இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நாகரீகமற்ற கருத்துக்களைக் கூறி தமிழ் மக்களின் வெறுப்புக்களை மேலும் சம்பாதிக்காது நிதானமான முறையில் வரலாற்றை நன்கு படித்து ஆராய்ந்து, சிந்தித்து இன ஒற்றுமைக்கான ஆரோக்கியமான கருத்துக்களை வெளியிட வேண்டும் என இறுக்கமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.