58 கிராம கால்வாய் திட்டத்திற்கு விரைவில் நிரந்தர அரசாணை- அமைச்சர் உறுதி

416 0

58 கிராம கால்வாய் திட்டத்துக்கு விரைவில் நிரந்தர அரசாணை பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்தார்.

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதன் பின்னர் அமைச்சர் பேசுகையில், “உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அரசாணை கிடைக்கும். பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு அவர்களின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான அரசாணையும், உசிலம்பட்டியில் மூக்கையா தேவரின் திருவுருவச் சிலை அமைப்பதற்கும் முதல்- அமைச்சர் விரைவில் அரசாணை வழங்குவார்” என்றார்.
விழாவில் உசிலம்பட்டி எம்.எல். ஏ.நீதிபதி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன், ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் துரை தனராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் மகேந்திரபாண்டி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் போத்தி ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பால்பாண்டி, ஏழுமலை நகர் செயலாளர் வாசிமலை, உசிலை பேரவை செயலாளர் வக்கீல் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.