நிதி நிறுவனம் மூலம் ரூ.42 ஆயிரம் கோடி மோசடி செய்த 2 பேர் கைது

288 0

டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிதி நிறுவனம் மூலம் ரூ.42 ஆயிரம் கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் பாத்தி, ராஜேஷ் பரத்வாஜ் ஆகிய இருவரும் அந்த மாநிலத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். உத்தரபிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்துக்கு டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பல கிளைகள் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரும் தங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ.17,000 வீதம் ஒரு ஆண்டில் ரூ.2 லட்சத்து 4 ஆயிரமாக திருப்பித்தரப்படும் என்கிற திட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தனர்.
இதனை நம்பி டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மாத தவணையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பல புகார்கள் பதிவாகின. அதன்பேரில் விசாரணை நடத்தியதில் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரும் பொதுமக்களிடம் வெற்று வாக்குறுதிகளை அளித்து பணத்தை வசூலித்து மோசடி செய்து வந்தது அம்பலமானது. அவர்களது நிறுவனத்தின் பெயரில் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.
மேலும் சஞ்சய், ராஜேஷ் தங்களின் நிறுவனம் மூலம் பல்வேறு மாநிலங்களில் இதுவரை ரூ.42 ஆயிரம் கோடி வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.