கர்நாடக மாநிலத்தில் 3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை

225 0

3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா டவுனை ஒட்டியுள்ளது, குட்டலு கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அர்க்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் பூசாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தினமும் கோவிலில் பூஜை மேற்கொண்டு வந்தனர். மேலும் இரவில் 3 பேரும் கோவிலுக்குள் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு 3 பூசாரிகளும் கோவிலில் படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை 3 பூசாரிகளும் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், 3 பூசாரிகளையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தனர்.
இதைதொடர்ந்து மர்மநபர்கள் கோவிலின் உள்ளே இருந்த 3 உண்டியல்களையும் பெயர்த்து எடுத்து கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். பின்னர் அதன் பூட்டுகளை உடைத்த மர்மநபர்கள் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, உண்டியல்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பூசாரிகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சம்பவம் குறித்து மண்டியா கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் கோவிலில் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதை தடுத்த 3 பூசாரிகளையும் அவர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பலியான 3 பூசாரிகளின் குடும்பத்தினருக்கும் கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.