மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி நோயாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

238 0

மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள அரச ஹோமியோபதி வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாட்டு மற்றும் வைத்தியசாலை வளப்பற்றாக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி நோயாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலையில் மருந்து பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மருந்து வழங்கப்படமாட்டாது என அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வந்த நோயாளிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலைக்கு ஹற்றன், குருநாகல், பொலநறுவை, பொத்துவில், திருகோணமலை, அனுராதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து  வருகை தந்து, நோயாளர்கள் தமது நோய்க்கான மருந்தை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் 15 தொடக்கம் 20 வீதமான மருந்துகள் இருப்பதாகவும் ஏனைய மருந்துகள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பலதடவை அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் மருந்து வரும்வரை காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதுடன், அரசாங்கத்தை மக்களாகிய நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம்.எங்கள் வரிப்பணத்தில் இயங்குகின்ற அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இங்கு வந்தால் வைத்தியர் தெரிவிக்கின்றார் போட்டை பார்க்க வில்லையா என இவ்வாறு பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்றது. இதனால் நோய்க்கான மருந்தை பெறமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது

எனவே உடனடியாக மருந்து பற்றாக்குறை, வைத்திய உபகரணங்கள் தட்டுப்பாடு,  தளபாடங்கள் தட்டுப்பாடு, நிரந்தர கட்டடம் போன்ற வளபற்றாக்குறைகளை உடன் நிவர்த்தி செய்து தருமாறு நோயாளர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.