மட்டக்களப்பு காட்டுப்பகுதிகளுக்குள் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட சிலர் அதிரடியாக கைது!

193 0

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை ஒதுக்குக்காடு மற்றும் கிரிமிச்சை அரச காட்டு பகுதிகளில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும், இரண்டு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

குடும்பிமலை ஒதுக்குக்காடு (எவரும் நுழைவதற்கு அனுமதியற்ற காட்டு) பகுதியில் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காடு அழிப்பில் ஈடுபட்ட நிலையில் இரண்டு சந்தேக நபர்களும், ஒரு வீல்லோடர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், இருவரும் தலா இருபதாயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வாகனம் நீதிமன்ற விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வாகரை கிரிமிச்சை அரச காட்டு பகுதியில் (எவரும் அனுமதியின்றி வேலை செய்ய முடியாத காடு) வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காட்டில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கல்முனையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும், ஒரு உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வாகனம் நீதிமன்ற விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் குறிப்பிட்டுள்ளார்.

வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் மேலும் தெரிவித்துள்ளார்.