சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

234 0

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டானில் 186 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட 30ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (09) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் திகதி இராணுவத்தினரும் ஊர்காவல் படையினரும் இணைந்து சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டு செல்லப்பட்டு சுட்டும், வெட்டியும் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலை இடம்பெற்ற காலத்தில் திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயராக இருந்தவரும் மட்டக்களப்பு சமாதானக் குழுவின் உறுப்பினருமான கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை சம்பவம் நடந்த மறுதினம் இராணுவத்தின் துணையுடன் படுகொலை இடம்பெற்ற பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு “முழுவதும் எரியூட்டப்பட்டிருந்தது. ஆனால், முழுவதும் எரியாத நிலையில் தலைகள், உடல் அங்கங்கள் கிடந்தன”. “அப்போது, என்னை அழைத்துச் சென்ற இராணுவ கேணல் பேர்சி பெர்ணான்டோ, எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. எங்களுடைய ஆட்கள்தான் செய்திருக்கிறார்கள். எனவே, நான் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அன்று நடந்ததை நேற்று ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துகொண்டார்.