உள்ளூராட்சி வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுக்க சமிக்ஞை பலகைகள்

215 0

உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பாவனையைக் கட்டுப்படுத்த சமிக்ஞை பலகைகளைப் பொருத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் யோசனை முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் வீதிகள் சேதமடைகின்றன என்று சபைகளின் தலைவர்கள் சுட்டிகாட்டியதையடுத்து அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கலந்துரையாடலிலேயே மாகாண ஆளுநர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, “உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரகப் பாவனையைத் தடுக்க அவற்றின் பயணத்துக்கு தடை என்று சமிக்ஞை பலகைகளை நடவேண்டும். அதற்கு முன்னதாக வீதிகளின் தரத்துக்கு ஏற்ப பயணிக்க முடியாத வாகனங்களின் வகைகளைக் கண்டறியப்படவேண்டும்.

சமிக்ஞை பலகைகளை நடுவதன் ஊடாகவே கனரக வாகனங்கள் உள்ளூராட்சி சபை வீதிகளில் பயணிப்பதை போக்குவரத்துப் பொலிஸாரால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்“ என்றார்.